சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த அரசினர் தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
"உயர்நீதிமன்றத்திலும் தமிழ் விரிவுபடுத்தப்பட வேண்டும்"
தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், "சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் மற்றும் உத்தரவுகள் அனைத்தும் தமிழிலேயே வழங்கப்பட வேண்டும். வழக்கு தொடர்பான அனைத்து வாதங்களும் தமிழில் அமைய வேண்டும். இதற்காக உயர்நீதிமன்றத்தில் தமிழைப் பயன்படுத்தத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.
ஏற்கெனவே மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக நடைமுறையில் உள்ளது. அந்த நடைமுறையை அப்படியே சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் விரிவுபடுத்த வேண்டும். எனவே, உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை வழக்காடு மொழியாகக் கொண்டுவருவது இந்தச் சூழலில் காலத்தின் கட்டாயமாகும்" என்று வலியுறுத்தினார்.
தீர்மானம் நிறைவேற்றம்
முதலமைச்சர் கொண்டுவந்த இந்த தனித்தீர்மானத்திற்கு ஆளும் கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சியான திமுக, அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட பேரவையில் உள்ள அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் தங்களது முழு ஆதரவையும் தெரிவித்தனர். உறுப்பினர்களின் ஆதரவைத் தொடர்ந்து, தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகச் சபாநாயகர் அறிவித்தார்.