சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், போக்சோ வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக வீரமணி பல்வேறு வழிகளில் பல கோடி ரூபாயைச் செலவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சிறுமி பாலியல் வழக்கில் தொடரப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (FIR) தனது பெயரைச் சேர்க்காமல் தவிர்க்க, தொழிலதிபர் ஜெம் வீரமணி ரூ. 70 கோடி வரை செலவிட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த வழக்கில் தன் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் பாயாமல் இருக்க சுமார் ரூ. 50 கோடி வரை செட்டில்மென்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
வழக்கில் இருந்து தப்பிப்பதற்கான பணத் தேவைகளுக்காக, சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் (ECR) அமைந்திருந்த ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்தை அவசர அவசரமாக ரூ. 50 கோடிக்கு வீரமணி விற்பனை செய்து பணத்தைப் பரிமாறியதாகக் கூறப்படுகிறது. அதேபோல், ஊட்டியில் இருந்த தனது நிலத்தையும் ரூ. 130 கோடிக்கு அவர் விற்பனை செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், காவல் துறை அதிகாரிகளுக்கு மட்டும் வழக்கு நடவடிக்கைகளை முடக்க ரூ. 10 கோடிக்கும் மேல் கைமாற்றப்பட்டதாகக் கூறப்படுவது விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைகள் மற்றும் செட்டில்மென்ட் விவகாரங்களில் சென்னையைச் சேர்ந்த பிரபல ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி ஒருவரின் மகனுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அவர் மூலமாகவே பலருக்கும் பணம் கைமாற்றப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இதனையடுத்து, இந்த விவகாரத்தில் தொடர்புடைய அந்த ரயில்வே தொழிற்சங்க நிர்வாகியின் மகனைக் கைது செய்து விசாரணை நடத்தக் காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.