தமிழ்நாடு

மதுரை சிறையில் ரூ.100 கோடி ஊழல்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

By Christon
02 Sep 2026, 08:05 AM
அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மத்திய சிறைச்சாலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.100 கோடி வழக்கில், 4 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில், மதுரை மத்திய சிறையில் இருந்த கைதிகள் மூலம் அஞ்சல் உறை, அட்டைகள் மற்றும் மருத்துவ உதவிப் பொருட்கள் தயாரித்து அரசுத் துறைகளுக்கு அனுப்பப்பட்டதாகவும், கைதிகளுக்குச் ஊதியம் வழங்கப்பட்டதாகவும் கூறி போலி கணக்குகள் தயார் செய்யப்பட்டுள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் இந்த நடவடிக்கைகளில் சுமார் ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்தது.

இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், புகாரில் முகாந்திரம் இருந்தால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சிறைவாசி ஒருவரின் மனைவி கோகிலா தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் எம். ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "சிறைவாசிகளுக்குச் ஊதியம் கொடுத்ததாகப் போலி கணக்கு காட்டி நடத்தப்பட்ட ரூ.100 கோடி ஊழல் வழக்கு விசாரணை மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது" எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்குப் பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், விசாரணையை விரைந்து முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

விசாரணையை கேட்ட நீதிபதிகள், மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, 4 வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டனர்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அறிக்கை தாக்கல் செய்யத் தவறினால், இந்த வழக்கு விசாரணை வேறு அமைப்பிற்கு மாற்றப்படும் என எச்சரித்த நீதிபதிகள், முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட நேரிடும் எனத் தெரிவித்தனர்.