தமிழ்நாட்டில் இன்று (11-09-2026) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 0.9 கி.மீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழ்நாடு வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை (Trough) நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழைக்கான சூழல் நிலவுகிறது.
இன்று மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் :
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், கீழ்க்கண்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, நாமக்கல், விழுப்புரம், செங்கல்பட்டு, கரூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
மேலும் தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் வெப்பநிலை நிலவரம் :
இன்று முதல் வரும் 15-09-2026 வரை உள் தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. எனினும் சில பகுதிகளில் வெப்பநிலை சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.
உள் தமிழ்நாட்டில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகலாம்.
கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு :
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை :
தென் தமிழ்நாடு கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வரை இருக்கும். இடையிடையே அதிகபட்சமாக 65 கி.மீ வேகம் வரை காற்று வீச வாய்ப்புள்ளது.
இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.