தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா வித்யாலயா பள்ளிகளைக் கட்டுவதற்கு நிலத்தை அடையாளம் காண வேண்டும் என்ற இடைக்கால உத்தரவை திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், நவோதயா பள்ளிகளுக்கான நிலத்தைக் கண்டறியத் தமிழக அரசுக்கு 3 மாதங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வு, தமிழ்நாட்டின் மனப்போக்கில் மாற்றம் தேவை எனக் குறிப்பிட்டதுடன், "இந்தி மொழியை மாநிலத்தின் மண்ணில் இருந்து விலக்கி வைக்க முடியாது. நவோதயா பள்ளிகள் மாநில அரசின் கொள்கைக்கு எதிரானது அல்ல. கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் மத்திய அரசுடன் மொழிப் பிரச்சனை குறித்துத் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என அறிவுறுத்தியது.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, நவோதயா பள்ளிகளின் கொள்கை மாநிலத்தின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக உள்ளதாகவும், இது தமிழ் மொழிக்கு மேலாக இந்தி ஆதிக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் வாதாடினார். மேலும், மத்திய அரசின் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்வது கட்டாயமில்லை என்றும், ஒரு அரசு கொள்கையை அமல்படுத்துமாறு நீதிமன்றங்கள் மாநிலத்தைக் கட்டாயப்படுத்த முடியாது என்றும் வாதிட்டார்.
தமிழ்நாடு அரசின் வாதத்தை நிராகரித்த நீதிபதி நாகரத்னா, மத்திய அரசின் கொள்கையைத் தமிழ்நாடு அரசு நிராகரிக்க முடியாது எனச் சுட்டிக்காட்டினார். மேலும், பேச்சுவார்த்தை மற்றும் கூட்டுப் பொறுப்புணர்வின் அவசியத்தை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் டிசம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குவது குறிப்பிடத்தக்கது. நவோதயா பள்ளிகள் மூலமாக இந்தி திணிக்கப்படும் என்ற அச்சத்தின் காரணமாகவே தமிழக அரசு தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.