கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த விண்ணப்பத்தின் அடிப்படையில், 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் (VVPAT) ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்கப்பட்டன. அப்போது சில வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீரெனக் பழுதானதாகவும், 6 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கும் ஒப்புகைச் சீட்டுகளுக்கும் இடையே முரண்பாடுகள் மற்றும் முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும் கூறி ஸ்டாலின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், கொளத்தூர் தொகுதியின் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் சீட்டுகளையும் 100 சதவீதம் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்றும், தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லாது என அறிவித்துத் தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தேர்தல் முடிவுகள் வெளியான 3 நாட்களிலேயே சரிபார்ப்புக் கோரி விண்ணப்பித்தும், வழக்கு தாக்கல் செய்வதற்கான 45 நாட்கள் காலக்கெடு முடிவடைந்த பிறகே இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டதால் நீதிமன்றத்தை அணுகியதாக வாதிட்டார்.
ஆனால், தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஒரு எம்.எல்.ஏ-வின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கத் தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல; இதை ஏற்றுக் கொண்டால் இதேபோன்று பல மனுக்கள் தாக்கல் செய்யப்படும்" எனக் கூறி மனுவை நிராகரிக்க வலியுறுத்தினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்பைத் தள்ளிவைத்திருந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கினர். அதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல (எனக் கூறி, அதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.