தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமைச்சர் ஜெகதீஸ்வரி இன்று காலை விருதுநகரில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்துகொண்டிருந்தார். அமைச்சரின் அரசு வாகனம் முன்னால் செல்ல, அதற்குப் பின்னால் பாதுகாப்பு வாகனமும் (Escort), அதனையடுத்து அவரது சொந்த வாகனமான மாருதி எர்டிகா காரும் பின் தொடர்ந்து வந்துள்ளன.
காட்டாங்குளத்தூர் சந்திப்பு அருகே கான்வாய் வந்தபோது, அமைச்சரின் சொந்தக் கார் எதிர்பாராதவிதமாக ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இறையன்பு (26) என்ற இளைஞர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த மறைமலைநகர் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர், உயிரிழந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய அமைச்சரின் சொந்த மாருதி எர்டிகா காரைப் பறிமுதல் செய்து, விபத்து குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், விபத்து ஏற்படுத்திய அமைச்சரின் சொந்த கார் ஓட்டுநர் சின்ன அக்னி கைது செய்யப்பட்டுள்ளார்.