தமிழ்நாடு

தாய்மாமன் தங்க மோதிரம்: வீட்டுக்கு போகும்போது வாங்கிக்கோங்க.. தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு!

By Christon
18 Sep 2026, 07:23 PM
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார். இது தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று (செப்.18) தலைமைச் செயலகத்தில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு தாய்-சேய் நலனை மேம்படுத்துவதற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு சேவைகள், அவசர மகப்பேறு சிகிச்சை, ஊட்டச்சத்து அளித்தல், பிரசவத்திற்காக மருத்துவமனையைத் திட்டமிடும் முறை, கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டுக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மென்பொருள் (PICME) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு மாநிலத்தில் தாய்-சேய் நலக் குறியீடுகள் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில், தாய்மாமன் சீர்மரபைப் பிரதிபலிக்கும் வகையிலும் வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்பு நலத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 22.06.2026 அன்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.80 இலட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இவற்றில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன என்று தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-6ல் (National Family Health Survey-6) பதிவாகியுள்ளது. இவற்றில் 4.20 இலட்சம் பிரசவங்கள் (53%) அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. அதில் 90 சதவீதம் சீமாங் மையங்களில் (CEmONC Centres) நடைபெறுகின்றன. இதன்மூலம், பாதுகாப்பான பிரசவம் மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளின் பிறப்பை உறுதி செய்வதில் பொது சுகாதார அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கப்படும். அதற்கென தனித்துவமான வரிசை எண்ணும் (Unique Serial Number), சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகமும் (Tamper-proof Packaging) வழங்கப்படும். இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 1,28,000 தங்கமோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள். PICME-யில் பதிவு செய்யப்பட்டு RCH அடையாள எண் (RCHID) பெற்றிருக்க வேண்டும்.

இத்திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் வரும் 28 ஆம் தேதி அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் 22.06.2026 முதல், திட்டம் தொடங்கப்படும் நாள் வரை பிறக்கும் குழந்தைகளுக்கு 107 மையங்களில் (Hubs) தினமும் 100 குழந்தைகள் வீதம் 28 ஆம் தேதி முதல் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கப்படும் நாளிலிருந்து அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது தங்கமோதிரம் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.