சிறுமிகளை பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலதிபர் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் நாளுக்கு நாள் வெளியாகும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இதில் அரசியல் தலையீடு மற்றும் கட்டப்பஞ்சாயத்து நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தற்போதைய பரபரப்பை மேலும் கூட்டியுள்ளன.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநிலத் தலைவர் ரஞ்சன் குமார் கூறுகையில், "வீரமணி விவகாரம் தொடர்பாக கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பரிலேயே கூடுதல் ஆணையரிடம் புகார் அளித்தேன். வீரமணி மற்றும் சாந்தி ஆகிய இருவரின் பெயர்களையும் குறிப்பிட்டே அந்தப் புகாரைக் கொடுத்தேன்.
ரியல் எஸ்டேட் விவகாரம் தொடர்பாக சாந்தியைச் சந்தித்த போது, அவருக்கும் வீரமணிக்கும் பணத் தகராறு இருப்பதாகக் கூறி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியனைச் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி சந்திப்புக்கு ஏற்பாடு செய்த பின்னரே இதன் பின்னணி வேறு என்று எனக்குத் தெரியவந்தது. பின்னர் சாந்தியின் வீட்டின் டிவியில் ஓடிய வீரமணியின் வீடியோவைச் செல்போனில் பதிவு செய்து ஆதாரத்துடன் காவல் துறையில் புகார் அளித்தும், 2025-ல்தான் புகார் வந்ததாகப் பொய் கூறுகின்றனர். புகார் கொடுத்த என்னைக் காவல் துறை விசாரணைக்கு அழைக்காதது ஏன்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஞ்சன் குமாரின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குத் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் கடும் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், "எனக்குச் சாந்தியைத் தனிப்பட்ட முறையில் தெரியாது; ரஞ்சன் குமார் மூலமாகவே அவர் எனக்கு அறிமுகமானார்.
வீரமணியிடம் உள்ள பாலியல் வீடியோக்களைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்து ரூ.20 கோடி பணம் வாங்கித் தருமாறு ரஞ்சன் குமாரும் சாந்தியும் தான் என்னை அணுகினார்கள். இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடமாட்டேன் என்று மறுத்துவிட்டேன். வீரமணியின் வீடு எங்கு இருக்கிறது என்பதுகூட எனக்குத் தெரியாது. நான் சாந்தியை மிரட்டியதாக கூறும் ரஞ்சன் குமார் அப்போதே ஏன் என் மீது புகார் அளிக்கவில்லை?. காவல் துறை விசாரணைக்கு அழைத்தால் முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளேன்" என்று விளக்கம் அளித்துள்ளார்.