தமிழ்நாடு

ஜெம் வீரமணி வழக்கு: அரசியலாக்க வேண்டாம்..! திமுக, தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை!

By Christon
25 Sep 2026, 05:49 PM
ஜெம் வீரமணி விவகாரத்தை திமுக, தவெகவினர் அரசியல் செயல் செய்ய வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக ஜெம் கிரானைட் வீரமணிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்றும், இது தொடர்பாக அரசியல் ரீதியான கருத்துக்களைத் தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு திமுக மற்றும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்துமாறும் வழக்கறிஞர்களுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ஜெம் வீரமணி மீதான வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் தப்பிக்க விட்டுவிட்டதாகத் தமிழக அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேட்டியளித்திருந்தனர். அதேபோன்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தகவல் தொழில்நுட்பப் பிரிவும் எக்ஸ் தளத்தில் திமுக அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவிட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பும் நஷ்டஈடும் கோரி திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், "2025 அக். 6-இல் புகார் அளிக்கப்பட்ட மறுநாளே வழக்குப்பதிவு செய்யப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவ்வாறு இருக்கையில், திமுகவின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்க் கருத்துகளைப் பரப்பும் அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக ஐடி விங் ஆகியோர் ரூ. 1.01 கோடி மான நஷ்டஈடு வழங்க வேண்டும்" எனக் கோரியிருந்தார். மேலும், சமூக வலைதளங்களில் இது தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகளையும் வீடியோக்களையும் நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், மெட்டா, யூடியூப் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி கோரினார்.

அமைச்சர்கள் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிடுகையில், "அமைச்சர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு முன்பாக சட்டப்பூர்வ நோட்டீஸ் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே, இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல" என்று சுட்டிக்காட்டினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திமுகவின் மனுவுக்கு அமைச்சர்கள், தவெக ஐடி பிரிவு மற்றும் சமூக வலைதள நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையைத் திங்கள்கிழமைக்குத் தள்ளிவைத்தார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி, "வீரமணி தொடர்பான வழக்கு மிகவும் தீவிரமானது; அதைப் படிக்கும்போதே மனம் பதறுகிறது. இந்த விவகாரத்தில் இருதரப்பும் மாறிமாறி அரசியல் ரீதியாகக் கருத்துகளைத் தெரிவிப்பது, வழக்கில் தொடர்புடையவர்கள் தப்பிப்பதற்குத் தான் வழிவகுக்கும். எனவே, இது குறித்து அரசியல் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம் என அமைச்சர்களுக்கும் திமுகவினருக்கும் அறிவுறுத்துங்கள்" என்று இருதரப்பு வழக்கறிஞர்களுக்கும் அறிவுறுத்தினார்.