தமிழ்நாடு

RATHAVETTAI EPISODE 2 : 20 கொலை வழக்குகள்... ஒரே பெயர் - மோகன்ராம் !

By Sumalekha
16 Sep 2026, 07:00 PM
நட்புக்காக தொடங்கிய பழி... போலீஸ் தேடிய மோசமான குற்ற வலையமைப்பாக மாறிய திண்டுக்கல் மோகன்ராமின் அதிர்ச்சி கிரைம் கதை!
நள்ளிரவு ஒரு மணி... கோவை நகர காவல்துறையின் ஸ்பெஷல் டீமான 'ஆபரேஷன் டி.எம்.'க்கு மொபைலில் கான்ஃபரன்ஸ் கால் வருகிறது. அதில் பேசிய அதிகாரி, கணபதி பகுதியில் ஒரு பங்களாவை குறிப்பிட்டு 'பாய்ஸ், அதிகபட்சம் பத்து நிமிஷத்துல தனித்தனியா அங்கே அசௌம்பிளாகி மறைஞ்சு நின்னுக்கோங்க. ரெட் கலர் ஜீப் ஒண்ணு வரும். அதுல இருந்து பெரிய சைஸ் நாய்களோட ஒருத்தன் இறங்கி வருவான். அவன்தான் நம்ம டார்கெட். ஆனா, வெப்பன்ஸ் எடுக்கணுமான்னு நானே சொல்றேன்...'

அவர் அழைப்பைத் துண்டித்த அடுத்த பத்தாவது நிமிடம் டீமின் 7 பேரும் தனித்தனியே அந்தப் பகுதிக்கு வந்து மறைவாக நின்றுகொண்டார்கள்.

அந்த மயான அமைதியிலும் இன்ஜின் சத்தமே இல்லாமல் சிவப்பு நிற ஜீப் ஒன்று வந்து நிற்கிறது. தனது இடுப்புயர வேட்டை நாய்கள் இரண்டுடன் இறங்கும் ஒல்லியான தேகமுடைய வளர்ந்த நபர், அவற்றுக்கு கறித்துண்டை வீசி விளையாட்டுக் காட்ட ஆரம்பிக்கிறார். டீம் ஹெட் சிக்னல் கொடுத்த அடுத்த இரு நொடிகளில் அவரை ரவுண்டு கட்டத் தொடங்குகிறது ஸ்பெஷல் டீம் ஆனால், அவர்களை நோக்கி வேட்டை நாய்கள் பாய, அந்த நபர் ஒரு குப்பியை வீச, வெள்ளை புகை அங்கே சூழ்ந்தது. அடுத்த சில நொடிகளில் நாய்கள் மற்றும் ஜீப்போடு ஆள் எஸ்கேப். அந்த நாய்களை சில நொடிகள் சமாளித்திருந்தால் ஸ்பெஷல் டீம் அவரை மடக்கியிருக்கும்.

தோல்வியடைந்தது ஆபரேஷன்! நான்கு கால் பிசாசுகள் போன்ற நாய்களை தன்னைச் சுற்றி வைத்தபடி, தன் கட்டுப்பாட்டில் இயங்கும் கூலிப்படைகளுக்கே மரண பீதியைக் காட்டும் அந்த நபர் யார் தெரியுமா? திண்டுக்கல் மோகன்ராம்! அவரை கைது செய்ய உருவாக்கப்பட்ட ஆபரேஷன்தான் 'ஆபரேஷன் டி.எம். அந்த முறை தப்பினாலும் அதன் பின் கைதானார். "அரெஸ்ட்டும், ஜாமீனும், மீண்டும் அரெஸ்ட்டும் திண்டுக்கல் மோகன் ராமின் ஜாதகத்தில் சர்வ சாதாரண நிகழ்வுகள் தான். ஆனால் இன்றைய தேதிக்கு அவர் வெளியில்தான் இருக்கிறார்!

கிட்டத்தட்ட 20 கொலை வழக்குகள் வரைக்கும் மோகன்ராம் மேல நிலுவையில் இருக்குது. எதுவுமே பணத்துக்கோ, நகைகளுக்கோ இல்ல. வேற ஆதாயத்துக்காக கிடையாது. எல்லாமே நட்புக்காக, நம்பிக்கைக்காக பண்ணிய கொலைகள்தான்" என்று ஆச்சரியமூட்டுகிறார் மோகன்ராம் வழக்குகள் சிலவற்றைக் கையாண்ட கோவை இன்ஸ்பெக்டர் ஒருவர்.

மோகன்ராமின் தொடக்கக் கால வாழ்க்கையை புரட்டிப் பார்த்தால் க்ரைம் பின்னணி எல்லாம் இல்லை. திண்டுக்கல்லின் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும்போது நடந்த ஒரு கொலைதான் இவரை கத்தியை தூக்க வைத்துள்ளது. அப்போது ஆயுதங்களை எடுத்தவரால் பிறகு கீழே வைக்கவே முடியவில்லை. தனது பாதுகாப்புக்காக ஆயுதமும் கையுமாக தூங்க வேண்டிய நிலை என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.

மோகன்ராமை கிரிமினலாக மாற்றிய கொலை என்ன? மதுரையைச் சேர்ந்த சீனியர் டி.எஸ்.பி. ஒருவர் அதை விவரிக்கிறார்..

''திண்டுக்கல்ல பெரிய ரவுடியான பாண்டியோட தம்பி நாகுவும், இந்த மோகனும் ஒண்ணா படிச்சிருக்காய்ங்க. பாண்டியோட எதிர் டீமான கரடி மணி எப்பவுமே பாண்டியைக் கொல்றதுக்கு டைம் பார்த்துட்டே இருந்திருக்கான். ஒரு தடவை ரெண்டு கோஷ்டிக்கும் நடுவுல ஓவரா முட்டிக்கிச்சு. ஒருத்தனை ஒருத்தன் முடிச்சுக்கட்ட துடிச்சப்ப, பாண்டி சிக்கலேன்னுட்டு. அவன் தம்பி நாகராஜனை முடிச்சுடுறதுன்னு முடிவு பண்ணிட்டாய்ங்க

ஒரு நாள் பாலிடெக்னிக்கில் இருந்து மோகனும் பாண்டியின் தம்பியும் நடந்து வந்துட்டு இருந்தப்ப, கரடி கோஷ்டி சுத்துப் போட்டுடுச்சு. சரசரன்னு வெப்பனை இறக்கிட்டாய்ங்க. கண்ணு முன்னால நண்பன சிதைச்சதுல மோகன் துடிச்சிருக்காம். 'நாகு நாகுன்னு கதறித் துடிச்சு காப்பாத்த பாய்ஞ்சிருக்காம், இதுல அவனுக்கும் செம்ம காயம். நண்பனை கொன்னதுக்கு பழிதீர்க்க கத்தி, அருவால கையிலெடுத்தாம். தன் தம்பிக்காக உயிரே கொடுக்க வந்த பயலாச்சேன்னு திண்டுக்கல் பாண்டியும் மோகன் ராமை தன் தம்பியாவே நினைச்சு பாத்துக்க ஆரம்பிச்சான். பெறவு பாண்டியை எங்க டிபார்ட்மென்ட் என்கவுன்டர்ல போட்டுச்சு.

அதுக்கப்புறம் அந்த டீமோட தலைவனாயிட்டான் மோகன்ராம். பாண்டி சாவுறதுக்குள்ள வெட்டுக் குத்து, கொலைன்னு ரொம்ப டீப்பா போயிட்டான் மோகன். ஒரு போலீஸ் அதிகாரி இப்படி பேசக்கூடாது, ஆனாலும் ஓப்பனா சொல்றேன்.. மோகன்ராமுக்கு இருக்குற டெக்னிக்கல் நாலெட்ஜுக்கு அவன் நல்ல வழியில வந்திருந்தா பெரிய இன்ஜினீயராயிருப்பான்.

அவ்ளோ நுணுக்கமான பய. இன்ஜினீயரிங் நாலெட்ஜ் உள்ள எந்த துப்பாக்கி எந்த ரகம் எத்தனை எம்.எம். எவ்ளோ தூரத்துல இருந்து சுட்டா சாவு உறுதின்னு தன் கூட்டாளிகளுக்கு கிளாஸ் எடுப்பான். ஒரு துப்பாக்கிய கையில கொடுத்தா அக்குவேற ஆணி வேற கழட்டிப் போட்டுட்டு திரும்ப மாட்டிடுவான். ஆனா இந்த அறிவ, கிரிமினல்தனத்துக்கு பயன்படுத்திட்டானே. அதான் விதி" என்றார்.

மோகன்ராம் பணத்துக்காக இல்லாமல் பழக்கத்துக்காக கொலை, கொலை முயற்சி, மிரட்டல் போன்ற காரியங்களை செய்தாலும், அவரது நட்பைப் பயன்படுத்தி தங்களின் கட்டப்பஞ் சாயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டவர்கள் பலர். கோவை மற்றும் கேரளாவுக்கு நடுவில் பல நூறு கோடி ரூபாய் மதிப்புடைய மிகப்பெரிய கல்லூரி ஒன்றின் விற்பனை விஷயத்தில் 'அண்ணன் மோகன்ராமை உள்ளே இறங்கச் சொல்லட்டுமால?" என்று அவரது பெயரை மட்டும் சொல்லி மிரட்டியே காரியம் சாதித்தது ஒரு டீம்.

'மோகேன் ஆளுப்பே நானு' என்று சொல்லி உயிர் பிழைத்தவர்களும் அதிகம், அதனாலேயே வெட்டுப்பட்டு செத்தவர்களும் அதிகம். மோகன்ராமை கைது செய்வதென்பது போலீஸுக்கு மிகப்பெரிய சவால்தான். எசகுபிசகாசு சிக்கினால்தான் சாத்தியம் என்பது போல் தப்பிக்கும் நபர். பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த நிலையில், சிதம்பரத்தில் 'ஹேண்ட்மேட் ப்ராடெக்ட்டாக தானே சில கையெறி குண்டுகளை தயாரித்தபோது திடீரென அது வெடிக்க, பலத்த காயத்தோடு அட்மிட் ஆக, டாக்டர்களோடு போலீஸும் சேர்ந்து சுற்றி வளைத்தது.

அந்த வழக்கு மற்றும் ட்ரீட்மென்ட் நேரத்தில் மோகனுக்கு உதவியாக இருந்தவர் டெல்டாவை சேர்ந்த பா.ம.க. பெரும் புள்ளி ஒருவர். இந்த புள்ளியின் தம்பியான வழக்கறிஞர் ராஜா, கும்பகோணம் அருகே ஒரு கும்பலால் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக சுட்டிக்காட்டப்பட்ட லாலி மணிகண்டன் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

ஜாமீன் பெற்ற அவர் சொந்த ஊருக்கு காரில் திரும்பி வந்துகொண்டிருந்தபோது கோவை நகர எல்லையான திருச்சி ரோடு எல் அண்ட் டி பைபாஸ் ஜங்க்ஷனில் மாலை வேளையில் சிலர் சுத்துப்போட்டனர். துப்பாக்கியால் காரை சுட உள்ளே இருந்தவர்கள் கீழிறங்கி தெறித்து ஓட, அவர்களை இந்த டீம் விடாமல் விரட்டி மூன்று பேரை சின்னாபின்னமாக வெட்டிக் கொன்றனர். தமிழகம் சந்தித்த மிக மூர்க்கமான கும்பல் கொலைகளில் ஒன்றாக இது பேசப்பட்டது.

இந்த சம்பவத்தை தலைமையேற்று செய்தது மோகன்ராம்தான் என்று போலீஸ் தகவல் பகிர்ந்தது. ஆனால், அந்த சம்பவத்தில் லாலி மணிகண்டன் உயிர் தப்பியிருந்தார். லாலி மணிகண்டனோடு எந்த முன்விரோதமும் இல்லாத நிலையிலும் மோகன்ராம் களமிறங்கி போட்டுத்தள்ள காரணம் 'நட்புதான்' என்று யூகித்தது போலீஸ்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மோகன் ராம் பல மாதங்களுக்குப் பின் மும்பையில் கைதானார். உண்மையில், வேறு ஒரு வழக்கில் வேறு ஒரு குற்றவாளியை தேடி மும்பையில் ஒரு ஸ்பாட்டில் சுத்துப் போட்ட போலீஸ், ரேபிட் ஆக்ஷனாக அறைக்குள் நுழைந்து துப்பாக்கியை நீட்ட பதிலுக்கு அந்த குற்றவாளியும் துப்பாக்கியை நீட்ட அப்போதுதான் போலீஸுக்கு புரிந்தது 'இது மோகன்ராமாச்சே!" என்று. சண்டை செய்யாமல் சரண்டரானவரை கோவை போலீஸ் கையிலெடுத்தது!

இப்போது மோகன்ராம் சலனமில்லாத ஒரு நிலையில் இருக்கிறார் வழக்குகளின் பின்னால் மட்டும் நடந்தபடி!

(ரத்தம் தெறிக்கும்) - எஸ்.ஷக்தி.