தமிழ்நாடு

அஜித் ஹெல்மெட் பரிசு முதல் விஜய் ரேஸ் சூட் வரை... தல - தளபதி ஸ்பெஷல் தருணங்கள் !

By Sumalekha
14 Sep 2026, 01:34 PM
சில்வர்ஸ்டோனில் விஜய்–அஜித் சந்திப்பு... பரிசுப் பரிமாற்றம், தேசியக் கொடி புகைப்படம், ரேசிங் சிமுலேட்டர் பயிற்சி என ரசிகர்களை கவர்ந்த ஸ்பெஷல் தருணங்கள்!
இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்ற Michelin Le Mans Cup கார் பந்தயம், அஜித் குமார் ரசிகர்களுக்கு மட்டுமின்றி விஜய் ரசிகர்களுக்கும் மறக்க முடியாத பல தருணங்களை கொடுத்துள்ளது. நடிகரும் தமிழ்நாடு முதல்வருமான விஜய், அஜித் குமார் பங்கேற்ற ரேஸை நேரில் காண சில்வர்ஸ்டோன் சென்றதுடன், போட்டியை பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

ரேஸ் நிகழ்வைத் தாண்டி, இருவரும் சந்தித்துக் கொண்ட தருணம், பரஸ்பரம் வழங்கிக்கொண்ட நினைவுப் பரிசுகள், தேசியக் கொடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் ரேசிங் சிமுலேட்டரில் அஜித், விஜய்க்கு பயிற்சி அளித்த காட்சிகள் என பல்வேறு தருணங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

 “பிரியமுடன் விஜய்... அன்பான சகோதரர் அஜித்” :

சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் அஜித்தை சந்தித்த விஜய், அவரிடம் அன்புடன் வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது விஜய் சார்பில் அஜித்துக்கு சிறப்பான நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

" பிரியமுடன் விஜய், to my lovely brother" எனக் குறிப்பிடப்பட்ட ரேசிங் கார் மினியேச்சரை விஜய், அஜித்துக்கு பரிசாக வழங்கினார். அஜித்தின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை நினைவுகூரும் வகையில் இந்தப் பரிசு அமைந்திருந்தது.

 விஜய்க்கு அஜித் கொடுத்த ஸ்பெஷல் பரிசு :

விஜய் அஜித்துக்கு ரேசிங் கார் மினியேச்சரை பரிசாக வழங்கிய நிலையில், அதற்கு பதிலாக அஜித்தும் விஜய்க்கு தனது ரேஸ் ஹெல்மெட்டை நினைவுப் பரிசாக வழங்கினார்.

அஜித்தின் ரேசிங் பயணத்துடன் தொடர்புடைய ஹெல்மெட்டை விஜய் பெற்றுக்கொண்ட இந்த தருணமும் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
 
விஜய்க்கு ரேஸ் உடை பரிசளித்த அஜித் :

இதோடு மற்றொரு சிறப்பான பரிசையும் அஜித், விஜய்க்கு வழங்கியுள்ளார். தவெக கொடியின் வண்ணங்களை நினைவுபடுத்தும் வகையில் "மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் கலந்த ரேஸ் உடையை" விஜய்க்கு அஜித் பரிசாக வழங்கினார்.

அஜித் வழங்கிய இந்த ரேசிங் உடையை விஜய் பெற்றுக்கொண்ட தருணம் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தேசியக் கொடியுடன் விஜய் – அஜித் :

பரிசுப் பரிமாற்றத்திற்குப் பிறகு விஜயும் அஜித்தும் இணைந்து தேசியக் கொடியை கையில் பிடித்தபடி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

சில்வர்ஸ்டோன் ரேஸ் பின்னணியில் இருவரும் தேசியக் கொடியுடன் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் ரசிகர்களிடம் தனி கவனத்தை பெற்றுள்ளது. திரையுலகில் பல ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் இருவரும் ஒரே இடத்தில் இணைந்து தோன்றிய இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

விஜய்க்கு ரேசிங் சொல்லிக் கொடுத்த அஜித்! :

விஜய் – அஜித் சந்திப்பில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய மற்றொரு விஷயம் ரேசிங் சிமுலேட்டர் பயிற்சி.

ரேஸ் காரை எப்படி இயக்குவது, ஓட்டும்போது எவ்வாறு கட்டுப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களை Simulator Module மூலமாக விஜய்க்கு அஜித் விளக்கிக் கொடுத்தார். ரேசிங் துறையில் நீண்ட காலமாக ஆர்வம் கொண்டுள்ள அஜித், சிமுலேட்டரில் விஜய்க்கு ரேசிங் அனுபவத்தை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த காட்சிகள் இருவருக்கும் இடையிலான நட்பான உறவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பச்சைக்கொடி காட்டிய விஜய் :

அஜித்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பின்னர், Michelin Le Mans Cup போட்டியின் தொடக்க நிகழ்விலும் விஜய் பங்கேற்றார்.

சில்வர்ஸ்டோன் டிராக்கில் பச்சைக்கொடியை அசைத்து ரேஸை விஜய் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். அஜித் குமார் பங்கேற்ற போட்டியை விஜய் நேரில் பார்த்து உற்சாகப்படுத்தியதும் இந்த நிகழ்வின் முக்கிய தருணமாக அமைந்தது.

தகுதிச்சுற்றில் 8வது இடம் :

இந்தப் போட்டிக்கு முன்பாக நடைபெற்ற qualifying சுற்றில் Ajith RedAnt by Virage அணி LMP3 Pro/Am பிரிவில் 8வது இடத்தைப் பிடித்திருந்தது.

No.16 காரில் அஜித் குமார் மற்றும் பிரெஞ்சு வீரர் Romain Vozniak இணைந்து போட்டியிட்டனர். தகுதிச்சுற்று முடிவு நம்பிக்கை அளித்த நிலையில், பிரதான போட்டியில் அணிக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை.

38வது இடத்தில் அஜித் அணி :

இரண்டு மணி நேரம் நடைபெற்ற பிரதான பந்தயத்தின் முடிவில் Ajith RedAnt by Virage அணி ஒட்டுமொத்தமாக 38வது இடத்தைப் பிடித்தது.

வெற்றி பெற்ற காரைவிட மூன்று சுற்றுகள் பின்தங்கி அஜித் இடம்பெற்ற கார் போட்டியை நிறைவு செய்தது. இதனால் சில்வர்ஸ்டோன் சுற்றில் அணியால் புதிய சாம்பியன்ஷிப் புள்ளிகளை சேர்க்க முடியவில்லை.

தற்போது Ajith RedAnt by Virage அணியின் சாம்பியன்ஷிப் புள்ளிகள் 21 ஆக உள்ளன.

விஜய் – அஜித் சந்திப்பு... ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணம்! :

ஒருபுறம் அஜித்தின் சர்வதேச ரேசிங் போட்டி, மறுபுறம் அவருக்கு ஆதரவாக சில்வர்ஸ்டோனுக்கு வந்த விஜய் என ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த சந்திப்பு, பல சிறப்பு தருணங்களால் நிறைந்திருந்தது.

ரேசிங் கார் மினியேச்சர், ரேஸ் ஹெல்மெட், மஞ்சள் – சிவப்பு நிற ரேஸ் உடை, தேசியக் கொடியுடன் புகைப்படம் என நினைவில் நிற்கும் தருணங்களுடன், விஜய்க்கு ரேசிங் சிமுலேட்டரில் அஜித் பயிற்சி அளித்ததும் இந்த சந்திப்பை மேலும் சிறப்பாக்கியுள்ளது.