விளையாட்டு

IND vs AFG: ஆப்கானிஸ்தான் டி20 தொடரிலிருந்து முக்கிய வீரர் விலகல்.. இந்தியாவுக்கு பின்னடைவு!

By Christon
14 Sep 2026, 07:47 PM
இந்தியக் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆப்கானிஸ்தான் டி20 தொடரிலிருந்து விளக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி களம் கண்டது. இந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் முழுமையாக வீசிய இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, வெறும் 16 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றிச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

35 வயதான வருண் சக்கரவர்த்தி கடந்த சில மாதங்களாகவே அடுத்தடுத்து பல்வேறு காயங்களால் அவதிப்பட்டு வருகிறார். நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பைப் தொடருக்குப் பிறகு, ஐபிஎல் 2026 தொடரிலும் அவர் காலில் காயத்துடனே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். அதன்பின்னர் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் தொடைப் பகுதி காயம் காரணமாக 3 போட்டிகளோடு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

காயங்களில் இருந்து மீள்வதற்காகப் பெங்களூரில் உள்ள பிசிசிஐ-யின் உயர்கட்டமைப்பு மையத்தில் (CoE) அவர் நீண்ட நாட்கள் தீவிரப் பயிற்சி பெற்று வந்தார். இடைவெளிகளுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) போட்டியில் விளையாடி, தனது உடல்தகுதியை நிருபித்த பிறகே தற்போதைய ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணியில் தேர்வானார்.

இருப்பினும், பிசிசிஐ மருத்துவக் குழுவின் சான்றைப் பெற்றுத் திரும்பும் வீரர்கள், தொடரின் நடுவிலேயே மீண்டும் காயமடைவது தொடர்கதையாகி வருகிறது. ஏற்கனவே பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் இத்தகைய சிக்கல்களைச் சந்தித்த நிலையில், இந்த மையத்தின் செயல்பாடு குறித்துப் பயிற்சியாளர்களும் தேர்வுக்குழுவினரும் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக பிசிசிஐ அண்மையில் ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தி, மருத்துவக் குழு உறுப்பினர் ஒருவரை அதிரடியாக நீக்கியதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வருண் சக்கரவர்த்தி, காயம் குறித்து எதுவும் வெளிப்படையாகப் பேசவில்லை. விளையாட்டு வீரர்களுக்குக் காயங்கள் ஏற்படுவது இயல்பானது என்றும், உடலின் எல்லைகளைத் தாண்டி உழைக்கும் போது காயம் ஏற்படுவதால் சற்று பின்வாங்கி, மீண்டும் வலுவாகத் திரும்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

செய்தியாளர் சந்திப்பு முடிந்த பின்னரே அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. முழு உடல்தகுதியை எட்டாத நிலையிலும், காயத்தின் தன்மை தீவிரமடைந்துள்ளதாலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான எஞ்சிய டி20 தொடரிலிருந்து வருண் சக்கரவர்த்தி முற்றிலும் விளக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவு இந்திய அணிக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது விலகல் இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.