ராகுல் காந்தியைப் பிரதமராக ஏற்றுக் கொள்ளாதவர்களுடன் கூட்டணியில் நீடிக்கக் கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்த கருத்து, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், செல்வப்பெருந்தகையின் இந்த விமர்சனம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "அவரு யாருங்க இப்போ?" என்று காங்கிரஸ் எம்பி பிரவீன் சக்கரவர்த்தி கேள்வி எழுப்பியுள்ளது புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
செல்வபெருந்தகையின் விமர்சனம்
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக நேர்மையுடன் ஒப்புக்கொள்பவர்களோடு மட்டுமே கூட்டணி அமைக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், அவரைப் பிரதமராக ஏற்காதவர்களுடன் எதற்காகக் கூட்டணியில் இருக்க வேண்டும் என்றும் வினா எழுப்பினார். தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்றுள்ள சூழலில், பிரதமர் வேட்பாளர் குறித்து எழுந்துள்ள கருத்து வேறுபாடுகளால் இந்த மோதல் உருவாகியுள்ளது.
"இப்போ அதெல்லாம் அவசியமே இல்லை"- பிரவீன் சக்கரவர்த்தி
செல்வப்பெருந்தகையின் இந்தக் கருத்து குறித்துச் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த எம்பி பிரவீன் சக்கரவர்த்தி, "அவரு யாருங்க இப்போ? கடந்த காலத்தில் அவர் என்னவாக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். இப்போது அதைப் பற்றிப் பேசுவது அவசியமே இல்லாத ஒன்று" எனக் கூறி அவரது விமர்சனத்தைக் கடந்து சென்றார்.
கூட்டணி ஆட்சி வலுவாக உள்ளது
தொடர்ந்து பேசிய பிரவீன் சக்கரவர்த்தி, காங்கிரஸ்-தவெக கூட்டணியில் எந்தவிதக் குழப்பமும் இல்லை என்றும் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு முன்பாக எவ்வளவு வலுவாக இருந்ததோ, அதே பலத்துடன் தற்போதும் தொடர்வதாகவும் தெரிவித்தார். டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்துத் தமிழ்நாட்டின் அரசியல் சூழல் மற்றும் காங்கிரஸின் இரண்டு அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசித்ததாகக் கூறிய அவர், வரலாற்றில் முதல்முறையாகத் தமிழ்நாட்டில் சிறப்பான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவராக பதவி வகித்து வந்த செல்வப்பெருந்தகையின் கருத்திற்கு அக்கட்சியை சேர்ந்த எம்.பி பிரவீன் சக்கரவர்த்தியின் பதில் உட்கட்சி பூசலை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.