தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்டாசு ஆலைகளுக்கான அனுமதி மற்றும் தொழிலாளர் நலன் தொடர்பாக ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்களுக்கு இடையே நேற்று காரசாரமான விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் கணேசன், "மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்த கால கட்டத்திலேயே பட்டாசு ஆலைகளுக்கு நேரடியாகச் சென்று தொழிலாளர்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தார்" எனக் குறிப்பிட்டார்.
இதற்கு உடனடியாகப் பதிலளித்துப் பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, "தற்போதைய முதலமைச்சர் விஜய் 2005-ஆம் ஆண்டிலேயே பட்டாசுத் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்" என்று கூறி, அவர் தொழிலாளர்களுடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தைச் காட்டினார். மேலும், ஆட்சியைப் பிடித்த பிறகும் தொழிலாளர்களின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் கீர்த்தனா சுட்டிக்காட்டிய 2005-ஆம் ஆண்டு புகைப்படம் எங்கு, எதற்காக எடுக்கப்பட்டது என்பது குறித்து நெட்டிசன்கள் இணையத்தில் தீவிரமாகத் தேடுதல் வீட்டையே தொடங்கினர். அந்தத் தேடலின் முடிவில் கடந்த ஆண்டு நடிகை ஸ்வர்ணாமல்யா வெளியிட்ட பழைய சமூக வலைதளப் பதிவு ஒன்று ஆதாரமாகக் கிடைத்தது.
அந்தப் பதிவில், "நடிகர் விஜய்யின் 'சிவகாசி' திரைப்படத்தின் விளம்பரப் பணிகளுக்காக நாங்கள் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளுக்குச் சென்று தொழிலாளர்களைச் சந்தித்தோம். அவர்களுடன் ஒருநாள் முழுவதையும் செலவிட்டோம். அது ஒரு அழகான தருணம்" என்று ஸ்வர்ணாமல்யா புகைப்படத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
சிவகாசி திரைப்படத்தின் விளம்பரத்திற்காக (Movie Promotion) பட்டாசுத் தொழிலாளர்களைச் சந்தித்த நிகழ்வை, தொழிலாளர்களின் குறைகளைக் கேட்டறிந்ததாகச் சித்தரித்து அமைச்சர் சட்டப்பேரவையில் பேசியுள்ளார் என்று எதிர்க்கட்சியினர் இணையத்தில் கொந்தளித்து வருகின்றனர். மேலும், சினிமா விளம்பரப் புகைப்படத்தைக் காட்டி ஆட்சிக்கான பிம்பத்தை உருவாக்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.