அரசியல்

ஆசிய போட்டி: வெண்கலத்தை தட்டிச்சென்ற தமிழ்நாட்டு வீரர்கள்...விஜயின் அதிரடி அறிவிப்பு!

By Sumalekha
26 Sep 2026, 01:15 PM
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலவன் செந்தில்குமார் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஜோடி கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் ரூ 60லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஹாங்காங் அணியிடம் போராடி தோல்வியை தழுவியது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஜோடி 10-11,11-2,10-11 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

கடைசி செட்டில் இந்திய அணி 10-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில், வெற்றிக்கு இன்னும் ஒரு புள்ளி மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் மூன்று புள்ளிகளை இழந்து 10-11 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

இந்திய வீரர்கள் கடைசி வரை போராடியிருந்தாலும், வெற்றிக்கு மிக அருகில் சென்று தோல்வியைச் சந்தித்தது ரசிகர்களுக்கு மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தோல்வியடைந்ததால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலவன் செந்தில்குமார் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஜோடிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

இந்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரர் இருவருக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் ரூ 60 லட்சம் ஊக்கத் தொகையை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் விளையாட்டின் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள ஸ்குவாஷ் வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

இவ்வீரர்களின் மகத்தான சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக தலா ரூ.30 லட்சம் வழங்கப்படும். இவர்களது வெற்றி, தமிழ்நாட்டின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்குப் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்.

இவர்களைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும். இவர்கள் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள்!” என்று முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.