அரசியல்

விஜய் அரசியலுக்கு புது பலம்.. தவெகவுக்கு மாநிலக் கட்சி அந்தஸ்து!

By Sumalekha
10 Sep 2026, 05:16 PM
தமிழ்நாட்டில் மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்ற அரசியல் கட்சிகளின் பட்டியலில் தற்போது தமிழக வெற்றிக் கழகமும் (தவெக) இணைந்துள்ளது.
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) மாநிலக் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளின் பட்டியலில் தவெகவும் இணைந்துள்ளது.

திமுக, அதிமுக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்ற 7-வது கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம், தனது முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, 35 சதவீத வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில், மாநிலக் கட்சி அங்கீகாரத்துக்கான தேர்தல் ஆணைய விதிமுறைகளை அக்கட்சி பூர்த்தி செய்துள்ளது.

இதையடுத்து, தவெகவுக்கு மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பு அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தவெகவின் அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னமாக ‘விசில்’ சின்னம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலக் கட்சி அங்கீகாரம் பெறுவது எப்படி?

தேர்தல் ஆணைய விதிகளின்படி, ஒரு கட்சி குறைந்தபட்சம் ஒரு சட்டமன்றத் தேர்தல் அல்லது ஒரு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டிருக்க வேண்டும். மேலும், குறிப்பிட்ட அளவிலான வாக்கு சதவீதத்தையும், சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற இடங்களையும் பெற்றிருக்க வேண்டும்.

இந்தத் தகுதிகளை தனது முதல் தேர்தலிலேயே தவெக பூர்த்தி செய்ததால் இதன் மூலம், தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளின் எண்ணிக்கை 6-ல் இருந்து 7 ஆக உயர்ந்துள்ளது.

விசில் சின்னம் :

விசில் சின்னம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே அந்த மாநிலத்தில் நிரந்தரச் சின்னமாக ஒதுக்கப்படும். பதிவு செய்யப்பட்டு, ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள், தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையம் வழங்கும் ‘பொதுச் சின்னங்கள்’ பட்டியலில் இருந்தே சின்னத்தைத் தேர்வு செய்ய முடியும்.

அதன்படி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் பொதுச் சின்னமாக ஒதுக்கப்பட்டது. தற்போது தமிழக வெற்றிக் கழகத்துக்கு மாநிலக் கட்சி என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், விசில் சின்னம் தவெகவின் நிரந்தரச் சின்னமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாநிலக் கட்சிகள் எவை?

திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தேமுதிக ஆகிய 6 கட்சிகள் ஏற்கனவே மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்றிருந்தன. தற்போது இந்தப் பட்டியலில் தவெகவும் இணைந்துள்ளது.

தற்போது மாநில கட்சிகளின் பட்டியலில் தவெகவும் இணைந்துள்ள நிலையில், இது தவெகவின் தொண்டர்கள் மற்றும் அமைச்சர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.