அரசியல்

திடீர் மூச்சுத் திணறல்: கொளத்தூர் MLA மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

By Christon
10 Sep 2026, 12:17 PM
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவருமான வி.எஸ். பாபு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (செப்.10) அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ICU-வில் சிகிச்சை

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த அவருக்கு, இன்று அதிகாலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சேர்க்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் வி.எஸ்.பாபு உடல் நிலை சீராக உள்ளதாகவும் தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் பின்னணி

கடந்த 2006-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வி.எஸ். பாபு, பின்னர் அதிமுகவில் இணைந்து 10 ஆண்டுகள் பயணித்தார். தவெக தொடங்கப்பட்ட பிறகு அக்கட்சியில் இணைந்த இவர், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டு 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.