தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (செப்.7) காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து முதலமைச்சர் விஜய் பேசினார். அப்போது திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், கட்சி நிதி (Party Fund) பெற்ற விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் முக்கியப் பங்கு இருப்பதாகக் குற்றம்சாட்டினார். முதலமைச்சரின் இந்தச் குற்றச்சாட்டிற்கு திமுக உறுப்பினர்கள் அவையில் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து முழக்கங்களை எழுப்பினர்.
முதலமைச்சரின் பேச்சுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி, திமுக உறுப்பினர்கள் பேசுவதற்குச் சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த திமுக எம்.எல்.ஏ-க்கள், சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டுத் தொடர்ந்து முழக்கமிட்டனர்.
அப்போது தலையிட்ட முதலமைச்சர் விஜய், திமுக உறுப்பினர்களைப் பேச அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார். முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்றுத் திமுகவினருக்குப் பேச அனுமதி வழங்குவதாகச் சபாநாயகர் அறிவித்ததும், உறுப்பினர்கள் அனைவரும் தங்களது இருக்கைகளுக்குத் திரும்பினர்.
தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைப் பேச அழைத்த சபாநாயகர், முதலமைச்சர் உரையாற்றும்போது திமுகவினர் அவையில் அமளியில் ஈடுபட்டது தவறு என்று சுட்டிக்காட்டினார். இதைக் கேட்ட திமுக உறுப்பினர்கள் மீண்டும் பேரவையில் கோஷங்களை எழுப்பத் தொடங்கினர்.
இதனால் அதிருப்தியடைந்த சபாநாயகர், திமுக உறுப்பினர்களுக்குப் பேச அனுமதி அளிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஏறத்தாழ 20 நிமிடங்களுக்கும் மேலாகச் சட்டப்பேரவையில் நீடித்த இந்தச் சலசலப்பைத் தொடர்ந்து, திமுக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.