பொழுதுபோக்கிற்காகப் பயன்பட்டு வந்த சமூக வலைத்தளங்கள், தற்போது அரசியல் கட்சிகள் மற்றும் வணிக நிறுவனங்களின் முக்கியப் பிரச்சாரக் களமாக மாறியுள்ளன. தேர்தல் நேர விளம்பரங்களுக்கு அப்பாற்பட்டு, குறிப்பிட்ட நிகழ்வுகளைத் திசைதிருப்பவும் தங்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்கவும் பெருந்தொகை செலவிடப்படும் 'பேய்டு புரமோஷன்' (Paid Promotion) கலாச்சாரம் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொடர்பான இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் குறித்த விமர்சனமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்களுக்குப் பணம் கொடுத்து முதலமைச்சர் விஜயைப் பாராட்டி வீடியோக்களைப் பதிவிட வைப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முதலமைச்சரின் பிம்பத்தைக் கட்டியெழுப்புவதற்கும், அவரை இந்தியாவின் அடுத்த பிரதமர் எனக் சித்தரிப்பதற்கும் வடமாநில இன்ஃப்ளூயன்சர்கள் மூலம் ரீல்ஸ்கள் வாயிலாகப் பிரச்சாரம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, பீகாரைச் சேர்ந்த 26 வயது பல்கலைக்கழக மாணவர் சவுரவ், தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை விஜய் மூடியதாக இன்ஸ்டாகிராம் மூலம் அறிந்து பாராட்டியுள்ளார். ஆனால், இதன் பின்னணியில் பிஆர் (Public Relations) குழு இயங்குவது அவருக்குத் தெரியாது என்றும், இத்தகைய வீடியோக்களுக்காக இன்ஃப்ளூயன்சர்களுக்கு ரூ. 50,000 முதல் ரூ. 1 லட்சம் வரை செலவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 22 லட்சம் ஃபாலோயர்களைக் கொண்ட சுபியா கான் மற்றும் சுபி பிளாகர் போன்ற பிரபல கணக்குகளில் விஜய் குறித்த வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதில், "விஜய் பாலியல் குற்றவாளிகளைச் சுட்டுக்கொல்ல முடிவு செய்துள்ளார்" எனக் கூறும் வீடியோவிற்காக சுபியா கான் ரூ. 60,000 பெற்றதாக தினேஷ் என்பவர் பேட்டியில் தெரிவித்துள்ளார். அதேபோல, கோயில்களில் நன்கொடைப் பெட்டிகளுக்குப் பதிலாகப் பள்ளி, கல்லூரிகளில் மட்டுமே வைக்க வேண்டும் என விஜய் முடிவெடுத்துள்ளதாகப் பேசிய சுபி பிளாகருக்கு ரூ. 20,000 வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் சார்ந்த இத்தகைய டிஜிட்டல் பிரச்சாரங்களுக்கு நேரடியாக வங்கி மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்படுவதில்லை என மக்கள் தொடர்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான நேரங்களில் ரொக்கப் பணமாகவே தரப்படுகிறது. தொலைதூரத்தில் உள்ளவர்களுக்கு வங்கி மூலம் அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட கட்சி அல்லது பிஆர் நிறுவனத்திற்குத் தொடர்பில்லாத நபர்களின் கணக்குகள் வழியாகவே பணம் அனுப்பப்படுகிறது.
ஒரே கணக்கில் இருந்து மீண்டும் பணம் அனுப்பப்படாமல், ஒவ்வொரு முறையும் புதிய கணக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் பிரச்சாரத்தை நடத்தும் முக்கிய நபர்களுக்கும் பணப் பரிவர்த்தனைக்கும் நேரடித் தொடர்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது. சில சமயங்களில் எந்த நிறுவனத்திற்காக வேலை செய்கிறோம் என்பது கூட இன்ஃப்ளூயன்சர்களுக்குத் தெரிவதில்லை என்றும், சிலர் ட்ரெண்டிங்கில் உள்ள விஷயங்களைப் பயன்படுத்தி வியூஸ் பெற ரீகிரியேட் செய்து பதிவிடுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.