தமிழ்நாட்டில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தேர்தலில் தவெக,திமுக,அதிமுக,நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - CPI(M) , உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதால் ஐந்துமுனை போட்டி நிலவியுள்ளது. இதனால் இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி என்பதில் மிகுந்த எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இடைத்தேர்தலுக்கான நாட்கள் குறைவாக உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான வேலைப்பாடுகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து பாமக சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் இரு தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நடைபெற்றது.
இந்த ஆலோசனைகளின் முடிவில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவதில்லை என்று ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுவிட்டது.
இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் இரு தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த ஆலோசனைகளின் முடிவில், எந்தக் கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இடைத்தேர்தல்களில் வழக்கமாக அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி நிலைப்பாடு அல்லது ஆதரவு முடிவுகளை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில், பாமக இந்த இரண்டு தொகுதிகளிலும் நடுநிலை நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக அக்கட்சியின் அறிவிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளும் தனித்தொகுதிகளாக உள்ளன. இந்தத் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட பணிகளில் கட்சிகள் கவனம் செலுத்தி வரும் நிலையில், பாமகவின் ஆதரவு நிலைப்பாடு குறித்து எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்த சூழலில், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு குறிப்பாக அதிமுக சார்பில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடியார் பாமக தங்களுக்கு ஆதரவு தரும் என்று நம்பியிருந்த நிலையில், இந்த அறிவிப்பால் அதிமுக தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.