2026 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, 2029 நாடாளுமன்றத் தேர்தலிலும் இக்கூட்டணி தொடரும் என அறிவித்துள்ளது. இருப்பினும், பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் அடுத்த பிரதமர் விஜய் தான் என்று தவெகவினரும், ராகுல் காந்தி தான் என்று காங்கிரஸாரும் மல்லுக்கட்டி வருகின்றனர்.
இந்தச் சூழலில், தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை தனியார் ஊடகத்திற்கு அளித்த நேர்காணல் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. அதில் பேசிய அவர், "2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி, தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த கர்நாடகா, தெலங்கானா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களிலும் இதே போன்ற வெற்றியைப் பெற்றிருந்தால், அப்போதே ராகுல் காந்தி பிரதமராகியிருப்பார்" என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், "அன்று மு.க.ஸ்டாலின் காட்டிய அர்ப்பணிப்பான பணியைக் காங்கிரஸ் செய்யத் தவறிவிட்டதோ என்ற வேதனை எனக்குள் இருக்கிறது. அன்றைய மாநில காங்கிரஸ் தலைவராக அருகில் இருந்து பார்த்தவன் என்ற முறையில் இதைக்கூறுகிறேன். காங்கிரஸுக்காக அவ்வளவு உழைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் விசுவாசமாக இல்லையோ என்ற வருத்தம் எனக்கு இப்போதும் உள்ளது" எனக் உருக்கமாகத் தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்றுத் தனது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ராஜினாமா செய்த செல்வப்பெருந்தகை, விரைவில் திமுகவில் இணையக்கூடும் என்று தகவல்கள் பரவிய சூழலில், அவரது இந்த நேர்காணல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.