சட்டப்பேரவையில் நேற்று கேள்வி - பதில் நேரத்தின்போது பேசிய ராணிப்பேட்டை எம்.எல்.ஏ தாஹிரா, தன் தொகுதியில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வரும் 'ஜே.கே. டயர்ஸ்' நிறுவனத்தை உடனடியாக மூட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அதற்குப் பதிலளித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, சுற்றுச்சூழலைப் பாதுகாத்துத் தொழிற்சாலை தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆனால், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜே.கே. டயர்ஸ் ஆலையே இல்லாத நிலையில், இல்லாத நிறுவனத்தைக் குறிப்பிடலாமா என்றும், அதற்கு அமைச்சரும் பதிலளிப்பதா என்றும் சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் மீம்களும் கடுமையாகப் பரவத் தொடங்கின.
இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்த எம்.எல்.ஏ தாஹிரா, "பேரவையில் பேசியது தவறுதான். உரையை டைப் செய்து கொடுத்தவர்கள் ஆலையின் பெயரை மாற்றி எழுதிவிட்டார்கள்.
அம்மூர் எடப்பாளையத்தில் பழைய டயர்களை எரித்துப் பர்னஸ் ஆயில் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. அந்த ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையிலேயே சட்டப்பேரவையில் பேசினேன்" என்று தெரிவித்துள்ளார்.
உண்மை நிலவரம் குறித்து விசாரித்ததில், அம்மூர் பகுதியில் 'ஏ.கே. டயர்ஸ்' என்ற பெயரில் பழைய டயர்களை உருக்கும் ஆலை ஒன்று இயங்கி வருவது தெரியவந்துள்ளது. இந்த ஆலையிலிருந்து வெளியேறும் கரும்புகையால் அப்பகுதி மக்களுக்குச் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதாகவும், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த 'ஏ.கே. டயர்ஸ்' (AK Tyres) நிறுவனத்தைக் குறிப்பிடுவதற்குப் பதிலாகவே, உரையில் ஏற்பட்ட பிழை காரணமாகச் 'ஜே.கே. டயர்ஸ்' (JK Tyres) எனப் பேரவையில் தவறாகப் பேசிவிட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.