மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவடையும் நிலையை எட்டியுள்ள சூழலில், பாமக தனது ஆதரவு நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்காமல் மௌனம் காத்து வருகிறது. பெரிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களின் களப் பணிகளைத் தொடங்கிவிட்ட நிலையில், பாமகவின் இந்த அமைதி அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற பொதுத்தேர்தலில் நிலவிய கசப்பான சம்பவங்கள் காரணமாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாகப் பாமகவின் ஆதரவைக் கோரியதாக கூறப்படுகிறது. மேலும், அவரைச் நேரில் சந்திக்க நேரம் கேட்ட அதிமுகவினருக்கு இதுவரை அன்புமணி ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் இந்த இடைத்தேர்தலில் அதிமுகவை பாமக ஆதரிக்க வாய்ப்பில்லை என்ற பேச்சு வலுத்துள்ளது.
வடமாவட்ட அரசியலில் பலம் சேர்க்க பாமகவின் தயவு திமுகவுக்குத் தேவைப்படுகிறது. மதுராந்தகம் தொகுதியில் வன்னியர் சமூக மக்களின் வாக்குகள் கணிசமாக இருப்பதால், பாமகவின் ஆதரவைப் பெறும் கட்சி வெற்றிக்கு நெருக்கமாக முடியும் என திமுகவும் அதிமுகவும் கணக்கிடுகின்றன. அதேவேளையில், தவெக தலைமையுடன் அன்புமணி நெருக்கம் காட்டி வருவதாலும், பாமக இடைத்தேர்தலில் போட்டியிடாமல் அமைதி காத்தாலே அது தங்களுக்குச் சாதகமாக அமையும் என ஆளுங்கட்சியான தவெக நம்புகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகத்தில் பிரதான கட்சிகளிடையே சொற்ப வாக்குகள் வித்தியாசமே இருந்த நிலையில், பாமகவின் வாக்குகள் இங்கு வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாகப் பார்க்கப்படுகிறது. அதிமுகவைப் புறக்கணிக்கும் பட்சத்தில், பாமக தவெகவுக்கு மறைமுக ஆதரவு அளிக்குமா அல்லது திமுக பக்கம் சாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாமக எடுக்கும் இந்த இறுதி முடிவு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளின் தேர்தல் முடிவுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.