அரசியல்

சமூக நீதி நாளில் அநீதி.. மாணவனுக்காக கொந்தளித்த உதயநிதி!

By Christon
17 Sep 2026, 06:19 PM
மலேசியாவில் படிக்கும் தமிழக மாணவர் பாரதிதாசனுக்கு உதவித்தொகை வழங்காமல் கல்வியைக் கேள்விக்குறியாக்கும் தவெக அரசுக்கு, சமூக அநீதியை அரங்கேற்றுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் முனைவர் பட்ட ஆய்வு செய்துவரும் தமிழக மாணவர் பாரதிதாசன், தமக்கு அம்பேத்கர் வெளிநாட்டு உதவித்தொகை வழங்கப்படாமல் தவெக அரசு அதிகாரிகள் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். ஆவணங்களை அனுப்பியும் நிதி வராததால் படிப்பில் இருந்து நீக்கப்படும் அபாயமும், ஆராய்ச்சி முடங்கும் சூழலும் நிலவுவதாகக் கூறிய அவர், ரோஹித் வெமுலாவிற்கு நடந்தது போன்ற அடக்குமுறையைத் தன் மீது பிரயோகிப்பதாகக் கண்ணீர் மல்க வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருப்பதாக தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் SofaModel அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

தன்னுடைய தவறை மறைக்க அடுத்தவர் மீது பழிபோடும் இந்த ஆட்சியாளர்கள், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வரவில்லை என்று சொன்ன மாணவரை குறிவைத்து நெருக்கடி தருவதும், கல்வியில் இருந்து வெளியேற்ற துடிப்பதும் கேவலத்தின் உச்சம்.

மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது.

ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்கு செய்கிறது என்று மனம் நொந்து பேசியிருக்கும் பாரதிதாசனின் கல்விக்கு எந்த இடையூறும் இந்த அரசு செய்யக்கூடாது.

அவருக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்கவும் - அவரது ஆராய்ச்சி படிப்பு தொடரவும் இந்த Reels அரசு துணை நிற்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.