அரசியல்

அண்ணாமலை முதல் தவெக ஆட்சி வரை.. காயத்ரி ரகுராம் பரபர பேட்டி!

By Christon
06 Sep 2026, 04:00 PM
அண்ணாமலை, தவெக அரசு மற்றும் விஜய்யின் நிர்வாகம் குறித்து அதிமுக மகளிரணி மாநில துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அ.தி.மு.க. மகளிரணி மாநில துணைச் செயலாளர் காயத்ரி ரகுராமை சந்தித்து இன்றைய பரபர அரசியல் சூழல், சட்டசபை நிகழ்வுகள், அ.தி.மு.க.வின் எதிர்காலம், த.வெ.க. அரசின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கேள்விகளாக முன்வைத்தோம்.

பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேரும்போது அண்ணாமலை மீது குற்றச்சாட்டு வைத்தீர்கள். அந்த மோதலுக்கு உண்மையான காரணம் என்ன?

"நிறைய காரணங்கள் உள்ளன. அந்த மனிதர் ஒரு நல்லவர் கிடையாது, பெண்களுக்கு எதிரானவர். தன்னை மட்டுமே நினைப்பவர். இன்னொருவரை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை எல்லாம் அவருக்கு கிடையாது."

அண்ணாமலையின் 'வீத லீடர்ஸ்' அமைப்பின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

"அண்ணாமலை வாயை திறந்தாலே பொய், அவரது செயல்களே பொய்தான். பொய்யான நபர்களைச் சுற்றி பொய்யானவர்கள்தானே இருப்பார்கள். அவர் மக்களுக்கு நல்லது செய்ய வரவில்லை. அப்படி இருந்தால் போலீஸ் ஆபிசராகவே இருந்து நல்லது செய்திருக்க வேண்டும். அதுவே பெரிய சேவைதான். அதை விட்டுவிட்டு அவர் அரசியலுக்கு வந்தது பணம் சம்பாதிக்க மட்டுமே. அவருக்கு குவாலிட்டி இல்லை. அப்படி இருந்திருந்தால் பா.ஜ.க.விலேயே நீடித்திருக்க வேண்டும்."

த.வெ.க. அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளன?

"விஜய் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் பெயர் அறிவிப்பு மட்டுமே வந்துள்ளது. அது மக்களைச் சென்றுள்ளதா என தெரியவில்லை. த.வெ.க. ஆட்சியில் மாற்றம் என்கிறார்கள். ஆனால், எல்லா இடங்களிலும் முதலமைச்சரின் போட்டோக்கள்தான் இருக்கின்றன.

டிசைன் டிசைனாக அவரை பப்ளிசிட்டி செய்வதில்தான் குறியாக இருக்கிறார்களே தவிர ஆக்கப்பூர்வமாக எதுவும் இல்லை. சட்டசபையில் சௌமியா, பிரேமலதா இருவர் மட்டுமே சிறப்பாகவும் நடுநிலையாகவும் பேசுகிறார்கள். த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் பேசுவது பட்டிமன்ற பேச்சு மாதிரிதான் உள்ளது. ஒழுங்குநெறி இல்லை.

இந்த மாதிரியெல்லாம் சட்டசபை இருந்ததே கிடையாது. 'சர்க்கார் போஸ்டரை கிழித்ததால்தான் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது, நாங்கள் இங்கு வந்துள்ளோம்' என ஜோக்கர்கூட பேசமாட்டார். முதல்வருக்கு புகழ்ச்சி பிடிக்காது என்று சொல்லி புகழ்ந்துகொண்டே உள்ளனர். அவரது நிர்வாக திறமையை வெளிப்படுத்திவிட்டு பிறகு புகழ்ந்தால் பரவாயில்லை. சட்டசபையில் முதலமைச்சர் வாயே திறப்பதில்லை. மற்றவர்கள் எல்லாம் பேசட்டும், நாம் பஞ்ச் டயலாக் மட்டும் பேசிக்கலாம் என்ற மனநிலையில் உள்ளார். இது தவறு!"

த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு அ.தி.மு.க.வின் அரசியல் இடம் சுருங்கியிருக்கிறதா?

"கண்டிப்பாக கிடையாது. இன்று தவெக அரசின் அனைத்தும் திட்டங்களும் அ.தி.மு.க. அரசுடன் ஒப்பிடப்படுகிறது. அதுவே அதற்கு சாட்சி."

அ.தி.மு.க.வின் எதிர்காலத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையில் மட்டுமே கட்டமைக்க முடியுமா?

"கண்டிப்பாக, அவரால் மட்டுமே கட்சியை சிறப்பாக கொண்டுபோக முடியும். குழப்பங்கள் செய்ய நிறைய பேர் உள்ளனர். திமு.க, தவெக இரண்டு கட்சிகளும் சினிமா புகழ் மூலமாகத்தான் செயல்படுகின்றன. எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே தலைமைப் பண்பு உள்ளது."