அரசியல்

எனக்கே இந்த நிலைமையா?... தோட்டத் திருட்டை சுட்டிக்காட்டிய EPS!

By Sumalekha
03 Sep 2026, 08:47 PM
இன்று நடைபெற்ற சட்டபேரவையில் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனது தோட்டத்திலும் திருட்டு சம்பவம் நடைபெற்றதாக சபாநாயகரிடம் குற்றச்சாட்டி உள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்ற நிலையில், இதில் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் திருட்டு மற்றும் குற்றச் சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்தார்.

விவாதத்தில் பேசிய அவர், கடந்த காலங்களில் கொங்கு மண்டலத்தில் முதியவர்களைக் குறிவைத்து அதிக அளவில் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றதாகவும், தற்போதும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினார். எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், போக்சோ உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் காவல்துறை கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும்,பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது வேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பெண்களின் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்டுள்ள 'சிங்கப்பெண்' அதிரடிப்படைக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும், மேலும் அந்தப் படையினருக்கு உரிய அதிகாரம் வழங்கினால் மட்டுமே குற்றச் சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

குற்றவாளிகளை அடையாளம் கண்டாலும் அவர்களைக் கைது செய்வதற்கான அதிகாரம் இல்லாத சூழல் இருப்பதாகக் கூறிய அவர், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு உரிய தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசை வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து விவசாயிகள் எதிர்கொள்ளும் திருட்டுச் சம்பவங்கள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி பேசினார். விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள பம்புசெட்டுகள், காப்பர் வயர்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்படுவதாகவும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் திருடிச் செல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களுக்கு போதைப் பழக்கத்தில் ஈடுபடுபவர்களே முக்கிய காரணம் என்றும்,பணம் இல்லாத நிலையில் போதைப் பொருட்களை வாங்குவதற்காக சிலர் திருட்டில் ஈடுபடுவதாகவும் கூறினார்.

மேலும், விவசாயிகள் அளிக்கும் புகார்கள் மீது காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்யாமல் அவர்களை அலைக்கழிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

இதையடுத்து தனது தோட்டத்தில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் குறித்து அவர் சட்டசபையில் பேசினார். சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், சிலுவலம்பாளையம் கிராமத்தில் உள்ள தனது தோட்டத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு போர்வெல்லுக்காக அமைக்கப்பட்டிருந்த மின் வயர்கள் அறுத்து திருடிச் செல்லப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து பேரவைத் தலைவரிடமும் தெரிவித்துள்ளதாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, "எனக்கே இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது என்றால், பொதுமக்களின் நிலை எப்படி இருக்கும்?" என கேள்வி எழுப்பி, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு மற்றும் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.