அரசியல்

முதலமைச்சர் புதிய அலுவலகம் ... டெண்டரை தட்டிச் சென்ற ராசி பில்டர்ஸ்!

By Sumalekha
04 Sep 2026, 11:14 AM
முதலமைச்சரின் அலுவலகத்தை மாற்றுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், புதுப்பிப்புப் பணிகளுக்கான டெண்டரை தற்போது ராசி பில்டர்ஸ் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வந்த முதலமைச்சரின் அலுவலகத்தை, நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதற்காக நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 வது தளத்தில் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,புதுப்பிப்பு பணிகளுக்கான டெண்டர் தற்போது இறுதி செய்யப்பட்டு, மொத்தம் ரூ 5.54 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டது. இதில் 5 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில்,ரூ 3.78 கோடிக்கு டெண்டர் கோரி ராசி பில்டர்ஸ் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது.

நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அதன்படி, பிளாக் 1-க்கு ரூ.2.41 கோடி, பிளாக் 2-க்கு ரூ.2.01 கோடி, பிளாக் 3-க்கு ரூ.1.12 கோடி என மொத்தம் ரூ.5.54 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது. பணிகளை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

பொதுப்பணித்துறையில் பதிவு செய்த ஒப்பந்ததாரர்கள் மட்டுமே டெண்டரில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, யுடெக் இன்ஜினியரிங், ராசி பில்டர்ஸ், ஈஸ்வரி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், ஸ்ரீ ராகவேந்திரா பில்டர்ஸ் மற்றும் கியூப் இன்ஃப்ரா ஆகிய 5 நிறுவனங்கள் போட்டியிட்டன. இதில் யுடெக் இன்ஜினியரிங் நிறுவனம் தொடக்க நிலையிலேயே தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், ராசி பில்டர்ஸ் நிறுவனம் ரூ.3.78 கோடிக்கு டெண்டர் கோரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது அரசின் மதிப்பீட்டுத் தொகையை விட சுமார் 32 சதவீதம் குறைவாக கோரிய நிலையில், இந்நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.

இதனிடையே, நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஜூலை மாத இறுதியிலேயே புதுப்பிப்பு பணிகள் தொடங்கியதாகவும், அப்போது டெண்டர் வெளியிடப்படாத நிலையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது எப்படி என்ற கேள்வியும் எழுந்தது. பணிகள் நடைபெறும் புகைப்படங்களும் வெளியாகின. எனினும், தவெக அமைச்சர்கள் அங்கு எந்தவித பணிகளும் நடைபெறவில்லை என மறுத்திருந்தனர். இதையடுத்து ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில் புதுப்பிப்பு பணிகளுக்கான டெண்டர் வெளியிடப்பட்டது.

முதலமைச்சரின் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவதற்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது புதுப்பிப்பு பணிகளுக்கான டெண்டரும் இறுதி செய்யப்பட்டுள்ளது.