சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்றச் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை திமுக சட்டமன்றக் கொறடா எ.வ.வேலு தலைமையில் எம்.எல்.ஏ-க்கள் குழு நேரில் சந்தித்துப் மனு அளித்தது. இந்தச் சந்திப்பின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சட்டமன்றத்தில் மிசா தொடர்பாக முதலமைச்சர் பேசிய பேச்சுக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரி திமுக சார்பில் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டிருந்தது. அந்த மனுவின் தற்போதைய நிலை குறித்து அறிவதற்காக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குழு சபாநாயகரைச் சந்தித்து ஆலோசனை நடத்தியது.
மேலும், சட்டமன்றக் கூட்டத்தொடரில் உண்மைக்கு மாறான தகவல்களைப் பேசியதாகச் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மீது திமுக சார்பில் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டது. உரிமை மீறல் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபாநாயகரைச் சந்தித்த பிறகு தலைமைச் செயலகத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.எல்.ஏ-க்கள், அவையில் இல்லாத முன்னாள் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றிப் பேசுவது விதிமுறைகளுக்குப் புறம்பானது எனக் குற்றம்சாட்டினர். மின்வெட்டு உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், அவதூறாகப் பேசுவதையும், தவறான தகவல்களைப் பரப்புவதையும் சுட்டிக்காட்டி உரிமை மீறல் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
சட்டம் ஒழுங்கு குறித்த எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், பழைய விவகாரங்களைத் தூக்கிக்கொண்டு முதலமைச்சர் பேசுவதாகவும், திசைதிருப்பும் அரசியலில் தவெக அமைச்சரவை ஈடுபடுவதாகவும் அவர்கள் சாடினர். மேலும், மு.க.ஸ்டாலினின் தியாகத்தைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும், அவையில் பொய்யான தகவல்களைப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.