மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய், மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்துப் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். 'விசில்' சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், திமுக மற்றும் அதிமுகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், "இங்கு நான் முதலமைச்சராக வரவில்லை; இடைத்தேர்தலுக்காக வாக்கைக் கேட்க வந்திருக்கிறேன். எப்போதும் போல உங்கள் வீட்டுப் பிள்ளையாக, மகனாக, அண்ணனாக, தம்பியாகவே வந்துள்ளேன். சாமானியர்களின் கட்சியான தவெக ஆட்சிக்கு வரக்கூடாதா? ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்க உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா? சினிமா முதல் அரசியல் வெற்றி வரை எனக்குத் தமிழ்நாட்டு உறவுகளே காரணமாக அமைந்தனர். அதன் விளைவாகவே கட்சித் தொடங்கி இரண்டரை ஆண்டுகளுக்குள் 35 சதவீத வாக்குகளைப் பெற முடிந்தது" எனக் குறிப்பிட்டார்.
மேலும் அவர், "திமுக தினந்தோறும் தவெகவைக் குறித்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசி வருகிறது. பெண்களை ஆபாசமாகப் பேசுபவர்களுக்குத் மக்கள் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனையாக விசில் சின்னத்திற்கு அளிக்கும் வாக்கு அமையும். திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க அதிமுக முயற்சி செய்தபோதே அவர்களின் முகமூடி கிழிந்துவிட்டது. அதிமுக முன்பு பாஜகவின் கிளையாக இருந்தது; ஆனால் தற்போது திமுகவின் கிளைக் கழகமாகவே மாறிவிட்டது. சாமானியர்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்ய முடியாது, மக்கள் பணத்தைத் தொட முடியாது என்பதால் இரு கட்சியினரும் மாறி மாறித் திட்டம் போடுகின்றனர். மக்கள் காசை நாங்கள் தொடவும் மாட்டோம்; தொட்டவர்களையும் விடமாட்டோம்" என எச்சரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "சட்டப்பேரவையில் ஊழல் என்று பேசினால் ஆதாரத்தைக் காட்டு என்கிறார்கள். பேசச் சொல்லிவிட்டுப் பேச எழுந்தால் பேச விடாமல் கத்துகிறார்கள். திமுகவினரால் இதுவரை ஊழல் செய்ததே இல்லை என்றோ, இனிமேல் செய்யமாட்டோம் என்றோ உறுதியாகச் சொல்ல முடியுமா? ஸ்டாலின் பற்றி ஏன் கேள்வி கேட்கிறாய், அவர் பாவம் தேர்தலில் தோற்று எதிர்க்கட்சித் தலைவராகக்கூட இல்லை என சிலர் கூறுகிறார்கள். அவர் தோற்றாலும் ஜெயித்தாலும் எனக்கு 'ஸ்வீட் அங்கிள்' தான். இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டி; ஒன்று தூயசக்தி தவெக, இன்னொன்று தீயசக்தி திமுக. தவெக ஆட்சியை வீழ்த்த திமுக போடும் மனக்கணக்கு ஒருபோதும் பலிக்காது. திமுக, அதிமுகவுக்கு வாக்களிக்காமல் தவெகவுக்கு வாக்களிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.