கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவுக்கு திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது ஆரோக்கிய நிலை குறித்து முதலமைச்சர் விஜய் இன்று நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.
கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். கடந்த 14 நாட்களாக அவருக்கு, சிறப்பு மருத்துவர்கள் குழு தொடர்ந்து தீவிர சிகிச்சைகளை வழங்கி வருகிறது.
வி.எஸ்.பாபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகவலையறிந்து, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்து வந்தனர்.
இந்தச் சூழலில், இன்று சென்னை அமைந்தகரையில் உள்ள மருத்துவமனை வளாகத்திற்கு நேரடியாகச் சென்ற முதலமைச்சர் விஜய், வி.எஸ்.பாபுவின் தற்போதைய உடல் நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள், மருந்துகள் மற்றும் உடல்நலனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் சிகிச்சையளிக்கும் மருத்துவ வல்லுநர்கள் குழுவிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.