இந்தியா

Dance -ல என்னை விட விஜய்யும் மோகன்லாலும் கம்மி தான் போல... Kerala CM நகைச்சுவை !

By Sumalekha
12 Sep 2026, 07:30 PM
AI உருவாக்கிய வைரல் நடன வீடியோவில் மோகன்லால், விஜய்யை மிஞ்சியதாக காட்டப்பட்ட வி.டி.சதீசன், அதற்கு சொன்ன நகைச்சுவை பதில் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது சினிமா, இசை, பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் AI உருவாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.

அந்த வகையில், கேரள முதலமைச்சர் வி.டி.சதீசனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஒரு AI வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் ‘அலா போலே’ பாடலுக்கு நடிகை ஷம்னா காசிம் மற்றும் நடனக் குழுவினர் ஆடும் அசைவுகளை அடிப்படையாக கொண்டு, வி.டி.சதீசன் மின்வாரிய ஊழியர்களுடன் இணைந்து நடனமாடுவது போன்று காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மின்வெட்டு பிரச்சனையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட வீடியோ :

கேரளாவில் சமீப காலமாக நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த மழைப்பொழிவு காரணமாக மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் சில பகுதிகளில் மின் விநியோகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த மின் கட்டுப்பாடுகளை விமர்சிக்கும் விதமாகவும், பொதுமக்களின் அதிருப்தியை நகைச்சுவை வடிவில் வெளிப்படுத்தும் வகையிலும் இந்த AI வீடியோ உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரியம் மற்றும் அரசை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

AI வீடியோ குறித்து முதலமைச்சர் வெளியிட்ட நகைச்சுவை கருத்து :

இந்த வைரல் வீடியோ குறித்து கருத்து தெரிவித்த வி.டி.சதீசன், AI தொழில்நுட்பம் தற்போது அனைத்து துறைகளிலும் மிக வேகமாக வளர்ந்து வருவதாக குறிப்பிட்டார்.

சமூக வலைதளங்களில் தன்னை வைத்து உருவாக்கப்பட்ட ஒரு சுவாரஸ்யமான வீடியோவை பார்த்ததாக கூறிய அவர், அதில் தான் ஒரு நடனக் குழுவை வழிநடத்துவது போன்று காட்சிகள் உருவாக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.

மேலும், அந்த வீடியோவில் நடிகர் மோகன்லால் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை விட தான் சிறப்பாக நடனமாடுவது போல காட்டப்பட்டிருந்ததாக கூறி, வி.டி.சதீசன் நகைச்சுவையாக தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.

AI தொழில்நுட்பத்திற்கு புதிய சட்டங்கள் தேவை :

AI தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பேசிய வி.டி.சதீசன், இதுபோன்ற செயற்கை உருவாக்கங்களை எதிர்காலத்தில் எப்படி சட்ட ரீதியாக அணுகுவது என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஒருவரின் உருவம், குரல் மற்றும் செயல்பாடுகளை AI மூலம் மாற்றி உருவாக்கும் தொழில்நுட்பம் அதிகரித்து வருவதால், பதிப்புரிமை, அறிவுசார் சொத்துரிமை மற்றும் தனிநபர் உரிமைகள் தொடர்பான சட்டங்களில் புதிய மாற்றங்கள் கொண்டு வர வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தொழில்நுட்ப வளர்ச்சியை வரவேற்கும் அதே நேரத்தில், அதன் தவறான பயன்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் வலுவான சட்ட கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதே தற்போது எழுந்துள்ள முக்கிய விவாதமாக உள்ளது.