இந்தியா

BANK STRIKE : வாடிக்கையாளர்களே உஷார்! நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் !

By Sumalekha
23 Sep 2026, 10:38 AM
வங்கி வேலை நாட்களை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தால், நாடு முழுவதும் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
வங்கிகளின் வேலை நாட்களை வாரத்திற்கு 5 நாட்களாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்தத்தால், வார இறுதி விடுமுறையுடன் சேர்த்து தொடர்ந்து 5 நாட்கள் வரை வங்கி சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

சமரச பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை :

வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு கிடைக்காததால், வேலைநிறுத்த முடிவை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

முன்னதாக, மத்திய நிதி அமைச்சகம் மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் சார்பில் வேலைநிறுத்தத்தை தவிர்க்குமாறு தொழிற்சங்கங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், முக்கிய கோரிக்கைகளுக்கு சாதகமான அறிவிப்பு வெளியிடப்பட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என சங்கங்கள் தெரிவித்துள்ளன.

வங்கி ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் :

வங்கி ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளில், வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கி பணி நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்பதும், ஊக்கத்தொகை வழங்குவதில் சமமான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்பதும் அடங்கும்.

இதனுடன், ஓய்வூதியத்தை புதுப்பித்தல் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் சங்கங்கள் முன்வைத்துள்ளன.

5 நாட்கள் வங்கி சேவை பாதிக்க வாய்ப்பு :

செப்டம்பர் 26-ம் தேதி மாதத்தின் 4-வது சனிக்கிழமை விடுமுறை மற்றும் செப்டம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும்.

இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 28 முதல் 30 வரை வேலைநிறுத்தம் நடைபெற உள்ளதால், மொத்தமாக 5 நாட்கள் வரை வங்கிப் பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 30-ம் தேதி அரையாண்டு கணக்கு முடிக்கும் நாள் என்பதால், பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்த அறிவுரை :

வேலைநிறுத்தம் காரணமாக வங்கி கிளைகள் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டால், வாடிக்கையாளர்கள் இணைய வங்கி சேவை, மொபைல் பேங்கிங் மற்றும் ஏடிஎம் வசதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு தேவையான பணப்புழக்கத்தை உறுதி செய்ய ஏடிஎம்களில் போதுமான பணம் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏடிஎம் சேவைகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் :

வங்கி வேலைநிறுத்தம் தொடர்பாக, ஏடிஎம்களுக்கு பணம் கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் வங்கி பெட்டகங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேலைநிறுத்த காலத்தில் பணிக்கு வரும் ஊழியர்களை தடுக்க முயற்சிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 2.50 லட்சம் வங்கி ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.