இந்தியா

அரசு விடுதிகளில் தங்கியிருந்த மாணவிகள் கர்ப்பம்.. வெளியான திடுக்கிடும் தகவல்!

By Christon
26 Sep 2026, 01:41 PM
ஒடிசாவில் அரசு பள்ளி விடுதிகளில் தங்கிப் படித்த 24 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக அம்மாநிலச் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி விடுதிகளில் தங்கிப் படித்த 24 சிறுமிகள், கடந்த இரண்டு ஆண்டுகளில் கர்ப்பமடைந்துள்ளதாக அம்மாநிலச் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிஷா சட்டப்பேரவையில் நேற்று (செப்.25) காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரா பிரசாத் பாகினிபதி விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் கர்ப்பம் அடைவது குறித்து எழுப்பிய கேள்விக்கு, பட்டியலின மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நித்யானந்த கோண்ட் அறிக்கை மூலம் பதில் அளித்தார்.

அமைச்சர் அளித்த பதிலின்படி, கடந்த 2024-25 கல்வியாண்டில் 9 மாணவிகளும், 2025-26 கல்வியாண்டில் 15 மாணவிகளும் கர்ப்பமாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 2025-26 ஆம் ஆண்டில் அதிகபட்சமாகக் கந்தமால் மாவட்டத்தில் மட்டும் 5 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்தச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அண்டை வீட்டார் அல்லது வெளிநபர்கள் என்றும், அவர்கள் பள்ளியைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் அமைச்சர் கூறினார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

தற்போதைய சம்பவங்களில் வெளிநபர்களே காரணம் எனக் கூறப்பட்டாலும், பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCSTRTI) நடத்திய ஆய்வறிக்கை வேறு விதமான தகவலைக் காட்டுகிறது.

கொராபுட், பாலசோர், நயாகர், மயூர்பஞ்சு மற்றும் சுந்தர்கர் ஆகிய 5 மாவட்டங்களில் 2011 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற 29 பாலியல் அத்துமீறல் வழக்குகளை ஆய்வு செய்ததில், 13 தலைமை ஆசிரியர்களும், 4 ஆசிரியர்களும் இந்தச் சம்பவங்களுக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய 'ஒடிசா கட்டாயக் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின்' ஒருங்கிணைப்பாளர் அணில் பிரதான், "பழங்குடியின நலத்துறை விடுதிகளில் பல வருடங்களாகச் சிறுமிகள் கர்ப்பமாகும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இதைத் தடுக்க அரசு போதுமான தீவிர நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. விடுதிகளில் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க ஆசிரியர்கள் மற்றும் விடுதிப் பொறுப்பாளர்களுக்குப் பல வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடப்பது அமைப்பிற்கே விழுந்த பெரும் கறை" எனக் கவலை தெரிவித்தார்.