இந்தியா

போலி ஐடி, துப்பாக்கி... PMO அதிகாரி எனக் கூறிய இளைஞர் கைது... மும்பையில் அதிர்ச்சி!

By Christon
11 Sep 2026, 12:56 PM
பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி எனக் கூறி உலாவந்த நபர் ஒருவர் போலி அடையாள அட்டையுடன் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தைச் (PMO) சேர்ந்த உயர் அதிகாரி எனக் கூறி உலாவந்த நபர் ஒருவர் போலி அடையாள அட்டையுடன் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் மற்றும் மாமனார் குடும்பத்தினரிடம் தான் ஒரு செல்வாக்குமிக்க அதிகாரி எனக் காட்டி அவர்களைக் கவர்வதற்காகவே அவர் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரோஹன் பாரிக் (24) என்ற அந்த நபரும், அவருடைய ஆயுதம் ஏந்திய பாதுகாவலரான திலீப் குண்டே என்பவரும் பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள வணிக வளாகத்தில் வைத்துக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறவிருந்த நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தின் (NMACC) அருகிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. இவரிடம் போலி PMO அடையாள அட்டையும், பாதுகாவலரிடம் துப்பாக்கியும் இருந்ததால், பாதுகாப்புப் படையினர் உடனடி நடவடிக்கையில் இறங்கினர்.

ஆரம்பத்தில் இது தீவிரப் பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டாலும், விசாரணையில் வெளிவந்த தகவல்கள் சினிமா கதையை மிஞ்சும் வகையில் அமைந்திருந்தன. சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்த ரோஹன் பாரிக், மத்திய அரசில் தனக்கு பெரும் செல்வாக்கு இருப்பதாகத் தனது வருங்கால மனைவி அவரது குடும்பத்தினரிடமும் பொய் சொல்லியுள்ளார். பிரதமர் அலுவலகத்துடன் தனக்கு நேரடியாகத் தொடர்பு இருக்கிறது என அவர்களை நம்ப வைக்கவே இத்தகைய போலியானத் திட்டத்தைத் தீட்டியுள்ளார்.

விசாரணையின் போது, கடந்த 2025-ஆம் ஆண்டிலேயே செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்தி, அசல் PMO அடையாள அட்டையைப் போன்றே தோற்றமளிக்கும் ஒரு போலி டிஜிட்டல் கார்டை ரோஹன் உருவாக்கியது தெரியவந்தது. பிரதமர் வருகைக்குச் சற்று முன்பாக ஜியோ வேர்ல்ட் பிளாசா பகுதிக்குள் நுழைந்து, VVIP வழியில் சென்று தனது கெத்தைக் காட்ட அவர் திட்டமிட்டிருந்தார். இதற்காக அப்பகுதியில் இரண்டு முறை முன்கூட்டியே சென்று நோட்டமிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் ரோஹன் பாரிக், அவரது பாதுகாவலர் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும், ரோஹனின் அலுவலக உதவியாளராகப் பணியாற்றிய பிரமேஷ் பகுல் என்பவரைத் தேடி வருகின்றனர். ஆள்மாறாட்டம், போலி ஆவணம் தயாரித்தல் மற்றும் VVIP பாதுகாப்பு விதிமீறல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.