இந்தியா

ஆசிரமத்தில் நடந்த இரட்டைக் கொலை.. 32 ஆண்டுகளுக்குப் பின் பிடிபட்ட கொலையாளி!

By Christon
25 Sep 2026, 09:17 PM
டெல்லியில் கடந்த 32 ஆண்டுகளாகக் காவல் துறையின் பிடியில் படாமல் தலைமறைவாக இருந்த கொலையாளி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1994-ஆம் ஆண்டு டெல்லியின் சக்கார்பூர் பகுதியில் உள்ள ஆன்மீக ஆசிரமம் ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த இரண்டு பெண் துறவிகள் கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். பின்னர் ஆசிரமத்தில் இருந்த பணம், நகைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த வழக்கில் பீகார் மாநிலம் சமஸ்திபூரைச் சேர்ந்த லலித் என்பவர் முதன்மை குற்றவாளிகளில் ஒருவராக இருந்தார். கொலைச் சம்பவத்திற்கு உதவி செய்த லலித், கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகளில் தனது பங்கைப் பெற்றுக்கொண்டு தப்பியோடினார்.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகச் சுனில் குமார், திலீப் ராம் மற்றும் சுஷீல் ஆகிய மூவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட போதிலும், லலித் மட்டும் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார். இதன் காரணமாக, 1995 அக்டோபர் 26 அன்று நீதிமன்றத்தால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

2000-ஆம் ஆண்டு வரை பீகாரின் பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த லலித், அதன் பின்னர் டெல்லிக்குக் குடிபெயர்ந்தார். டெல்லியின் மங்கோல்புரி பேஸ்-2 பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பேக்கிங் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த அவர், அடிக்கடி வேலையையும் வசிப்பிடத்தையும் மாற்றிக் கொண்டு தனது பழைய அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வந்தார்.

டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு மங்கோல்புரி பகுதியில் லலித் நடமாட்டம் குறித்துக் ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட காவல்துறையினர், சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் அதிரடி சோதனை நடத்தி லலிதைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரின் அடையாளம் சான்றுகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. தொடக்கத்தில் வீட்டு வேலைக்காரராக டெல்லிக்கு வந்த போதே, இந்த வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளுடன் லலிதிற்குப் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகச் சக்கார்பூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல்துறையினர் மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.