இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றி வரும் ஞானேஷ் குமாருக்குக் கீழ் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் தேர்தல் ஆணையர்களாகச் செயல்பட்டு வருகின்றனர். வழக்கமாகத் தேர்தல் ஆணையத்தின் முக்கிய முடிவுகள் அனைத்தும் இந்த மூவராலும் இணைந்தே எடுக்கப்படும்.
ஆனால், நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின் (SIR) போது, பல வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு மற்ற இரு ஆணையர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். கடந்த 10 மாதங்களில் சுமார் 14 முறை பிற ஆணையர்கள் தெரிவித்த ஆட்சேபனைகளைப் புறக்கணித்து, ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பிற ஆணையர்களின் அதிருப்தி தொடர்பான தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஞானேஷ் குமாருக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பதவிநீக்க நோட்டீஸ் வழங்கப்பட்ட போதிலும், அவைத் தலைவர்களால் அவை நிராகரிக்கப்பட்டன. இருப்பினும், அவரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், மற்ற இரு ஆணையர்களின் ஒப்புதலின்றித் தன்னிச்சையாகச் செயல்பட்ட ஞானேஷ் குமார் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 32-வது பிரிவின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான அனைத்துத் தன்னிச்சை முடிவுகளையும் சட்டவிரோதமானவை என அறிவிக்க வேண்டும் என்றும், அசல் படிவம் 6-ஐ மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திருத்தப் பணியின் போது சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.