இந்தியா

விஸ்வரூபம் எடுக்கும் சிஎம்ஆர்எல் வழக்கு: விசாரணை வளையத்தில் பினராயி விஜயன் குடும்பம்!

By Christon
22 Sep 2026, 09:58 PM
சிஎம்ஆர்எல் லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், பினராயி விஜயன் குடும்பத்தினர் மீது காவல்துறை விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
சிஎம்ஆர்எல் (CMRL) லஞ்ச வழக்கு தொடர்பாக, கேரள முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன், அவரது மகள் வீணா மற்றும் மருமகன் முகமது ரியாஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அமலாக்கத்துறை (ED) அறிக்கை சமர்ப்பித்திருந்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் காவல்துறை விசாரணை நடத்தக் கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத்துறை அளித்த அறிக்கையின் மீது மாநிலக் காவல்துறைத் தலைவர் (DGP) மூலம் விசாரணை நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா அறிவித்துள்ளார். முதற்கட்டமாக, வழக்குப்பதிவு ஏதும் செய்யப்படாமல், மாநிலக் காவல்துறையின் குற்றப்பிரிவு மூலமாக இந்த முதற்கட்ட விசாரணை நடத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமலாக்கத்துறையின் அறிக்கை தொடர்பாகப் சட்ட வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற மாநில அரசு, அட்வகேட் ஜெனரலிடம் கருத்து கேட்டிருந்தது. அதன் பேரில் பெறப்பட்ட சட்ட ஆலோசனையைத் தொடர்ந்து, முதலமைச்சர் வி.டி. சதீசனுடன் ஆலோசனை நடத்திய உள்துறை அமைச்சர், இந்த விசாரணைக்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். லலிதா குமாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், ஊழல் வழக்குகளில் முதற்கட்ட விசாரணை நடத்த அனுமதி உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பினராயி விஜயனின் மகள் வீணாவிற்குச் சொந்தமான 'எக்சாலாஜிக் சொல்யூஷன்ஸ்' என்ற நிறுவனத்திற்கு, 'ஐடி ஆலோசனை சேவை' வழங்கியதாகக் கூறி 'கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட்' (CMRL) நிறுவனம் ரூ. 2.78 கோடி போலிப் பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறை பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.