அண்மை

"ஓடிவிடக்கூடாதுனு சொல்லிட்டு ஓடியது யார்?"- விஜய் Vs உதய்... காரசார விவாதம்..!

By Christon
03 Sep 2026, 01:54 PM
முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே நடைபெற்ற சரசார விவாதம் பேரவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே நடைபெற்ற சரசார விவாதம் பேரவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

முதல்வர் தயாராகி வர வேண்டும்!

பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "காவல்துறை மீதான விவாதத்திற்குப் பதிலளிப்பதற்கு முதலமைச்சர் விஜய் நன்றாகத் தயாராகி வர வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

இதற்கு உடனே குறுக்கிட்டுப் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், "முதலமைச்சர் அமைதியாக அமர்ந்திருப்பதைப் பார்த்தாலே அவர் அனைத்திற்கும் தயாராகத் தான் இருக்கிறார் எனத் தெரிகிறது. அவர் ஏற்கெனவே தயாராகிவிட்டார் (He is already prepared)" என்றார்.

அதற்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "நாங்கள் அவரைத் தயாராக வரவேண்டாம் என்றா சொல்கிறோம்; தயாராகத் தான் வரச் சொல்கிறோம். காவல்துறை குறித்துக் கேள்வி கேட்டால் வேறு துறை அமைச்சர்கள் பதிலளிக்கிறார்கள். முதலமைச்சர் இப்போதே தயாராக இருந்தால் இன்றே பதிலளிக்கச் சொல்லுங்கள்" என்று கூறினார்.

பதிலளிக்கும்போது ஓடிவிடக் கூடாது!

முதலமைச்சர் வரும் திங்கள்கிழமை பதிலளிப்பார் என்று சபாநாயகர் தெரிவித்த நிலையில், திடீரென எழுந்து பேசிய முதலமைச்சர் விஜய், "எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் திங்கள்கிழமை அன்று விரிவாகப் பதிலளிப்பேன். நான் அவையில் இல்லாத நேரத்திலும் இங்கு எழுப்பப்படும் கேள்விகளைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஆனால், நான் திங்களன்று பதிலளிக்கும் போது உறுப்பினர்கள் யாரும் அவையை விட்டு எழுந்து ஓடிவிடக் கூடாது" என்று விமர்சித்தார்.

பேரவையில் நிலவிய சலசலப்பு

இவ்வாறு கூறிவிட்டு முதலமைச்சர் விஜய் உடனடியாக அவையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். அவர் சென்ற உடனே மீண்டும் எழுந்த உதயநிதி ஸ்டாலின், "இப்போது யார் அவையை விட்டு வெளியே எழுந்து ஓடியது?" என்று கேள்வி எழுப்பினார். இதனால் சட்டப்பேரவையில் உறுப்பினர்களிடையே பெரும் அமளியும் பரப்பரப்பும் நிலவியது.