தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படம் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சந்தீப் கிஷன் கதாநாயகனாகவும், ஃபரியா அப்துல்லா கதாநாயகியாகவும் நடித்துள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. தமன் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் ராஜு சுந்தரம், சம்பத் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் 18-ஆம் தேதி சிக்மா படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள சூழலில், இதில் முதலமைச்சர் விஜய் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்து ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஜேசன் சஞ்சய், "எனது தந்தை முதலமைச்சரானதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. சிக்மா படத்தின் ரிலீஸுக்காக அவரும் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்" எனத் தெரிவித்தார்.
படத்தின் புரமோஷன் நிகழ்வுகளில் முதலமைச்சர் விஜய் கலந்துகொள்வாரா என்ற கேள்விக்கு விளக்கிய ஜேசன் சஞ்சய், "விளம்பரங்கள் அனைத்தும் படத்தை மையமாகக் கொண்டு மட்டுமே இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அதை வேறு விஷயங்களுடன் கலக்க விரும்பவில்லை. தவிர, அவர் இப்போது முதலமைச்சராக இருப்பதால் அவருக்குப் பல பொறுப்புகள் உள்ளன. அதனால் நான் என்ன செய்திருக்கிறேன் என்பதைப் பார்க்க அவர் ஆவலுடன் காத்திருக்கிறார்" எனக் கூறினார்.
தந்தையிடம் இருந்து எதைக் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 'நேரம் தவறாமை' என்று பதிலளித்த ஜேசன் சஞ்சய், 'உங்களுக்காக சினிமாவில் தந்தை எதை விட்டுச் சென்றுள்ளார்?' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு "அவர் தனது ரசிகர்களை எனக்குக் கொடுத்திருக்கிறார்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.