கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'GOAT' திரைப்படம் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு, "முதல்வர் விஜய்க்கு நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.
வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள ஒரு குறிப்பிட்ட காட்சிதான் தற்போது அரசியல் மற்றும் திரை வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
வீடியோவில் விஜய் பேசும் ஒரு வசனமான "No one can stop me" என்ற வாக்கியம் ஒலிக்கும் அந்தச் நொடியில், டெல்லியில் உள்ள இந்திய நாடாளுமன்றக் கட்டடத்தின் காட்சி காண்பிக்கப்படுகிறது. திரைப்படத்தில் தமிழக அரசியலையும், முதலமைச்சர் நாற்காலியையும் மையப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 'நாடாளுமன்றக் காட்சி' இடம்பெற்றிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
முன்னதாக 'GOAT' திரைப்படத்திலேயே, விஜய் ஓட்டும் கார் ஒன்றின் நம்பர் பிளேட்டில் '2026 - CM' என்ற எண் மறைமுகமாக வைக்கப்பட்டிருந்தது. தமிழகச் சட்டமன்றத் தேர்தலைக் குறிக்கும் வகையில் வெங்கட் பிரபு வைத்த அந்த குறியீடு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது.
தற்போது 2 ஆண்டுகள் நிறைவு வீடியோவில் நாடாளுமன்றக் கட்டடத்தைக் காண்பித்திருப்பதைப் பார்த்து, "2026-ல் மாநில அரசியல் வெற்றிக்குப் பிறகு, விஜய்யின் அடுத்த இலக்கு டெல்லியா? அதைத் தான் வி.பி மீண்டும் முன்கூட்டியே கணித்துக் கூறுகிறாரா?" என நெட்டிசன்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பி, அந்த வீடியோவைப் பெருமளவில் பகிர்ந்து வருகின்றனர்.
Thanks for the memories which we will cherish for a lifetime @actorvijay na💐💐💐🙏🏽🙏🏽🙏🏽❤️❤️❤️#2YearsOfTheGOAT #TheGreatestOfAllTime @archanakalpathi @aishkalpathi @thisisysr @Jagadishbliss pic.twitter.com/AxZYtqbnhe
— venkat prabhu (@vp_offl) September 4, 2026