சினிமா

TAX காட்டாத எஸ்.ஜே.சூர்யா.. ஷாக் கொடுத்த உயர் நீதிமன்றம்!

By Christon
18 Sep 2026, 05:03 PM
வருமான வரி தொடர்பான வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொண்டே ஆக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான 6 வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா திரும்பப் பெற்றதை அடுத்து, அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2002-2003 முதல் 2009-2010 வரையிலான 6 நிதியாண்டுகளுக்குரிய வருமான வரிக் கணக்குகளை முறையாகத் தாக்கல் செய்யவில்லை என எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு எதிராக வருமான வரித்துறை சார்பில் 6 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் இருந்து தன்னை முழுமையாக விடுவிக்கக் கோரி எஸ்.ஜே.சூர்யா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் நீதிபதி சுந்தர் மோகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த 6 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி எஸ்.ஜே.சூர்யா ஏற்கனவே தாக்கல் செய்த மனுக்கள் கடந்த 2022-ஆம் ஆண்டே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. தற்போது மீண்டும் அதே காரணங்களைக் குறிப்பிட்டு, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன" என்று வாதிட்டார்.

வருமான வரித்துறையின் வாதத்தைப் பரிசீலித்த நீதிபதி, இந்த 6 வழக்குகளையும் எஸ்.ஜே.சூர்யா எதிர்கொண்டே ஆக வேண்டும் என்றும், விடுவிக்கக் கோரும் மனுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதையடுத்து, தாக்கல் செய்த 6 மனுக்களையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாக எஸ்.ஜே.சூர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுக்களை வாபஸ் பெற அனுமதி வழங்கி, அவற்றை முழுமையாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.