‘கோட்டை அழிங்க, முதல்லேருந்து கணக்குவைங்க’ என்று 50 பரோட்டா காமெடியில் அதகளம் பண்ணிய காமெடி நடிகர் இன்றைக்கு இருக்கிற எல்லா ஹீரோக்களுக்கும் ‘டஃப்’ கொடுக்கிற நாயகனாக, மண்டாடி ஹீரோவாக உருமாறியிருக்கிறார். சினிமாவில் இதெல்லாம் சாதாரணப்பா என்று சொல்லமுடியாத அளவுக்கு உழைப்பையும் ஆழ்ந்த ஈடுபாட்டையும் அர்ப்பணித்ததுதான் வெற்றி ரகசியம்; இதுதான் ஒருவருடைய வெற்றிக்கான ஃபார்முலாவாகவும் சொல்லப்படுகிறது.
வெற்றிமாறனின் ‘விடுதலை’ தந்த தொடக்கத்தை சூரியின் இரண்டாம் பாகம் என்றுதான் சொல்லவேண்டும். காமெடிக் காட்சிகள், ஹீரோவின் நண்பன் என்றெல்லாம் வந்து நம் மனதை இடம்பிடித்த சூரியின் வாழ்க்கை, ‘வி.மு’., ‘வி.பி’ என்றுதான் பார்க்கவேண்டும். சினிமா ஆசையுடன், கனவுகளுடன் இன்றைக்கும் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் வந்து இறங்கிக்கொண்டே இருக்கிறார்கள் இளைஞர்கள். பஸ் வராத கிராமங்களிலில் இருந்தும் கூட, இன்றைக்குப் பலரும் வருவதற்கு ஏதோவொரு வகையில் சூரியின் வெற்றி தந்திருக்கிற தன்னம்பிக்கை, நூறு யானை பலம்!
கலர் முக்கியமில்ல, பரட்டைத்தலையுடன் இருந்தாலும் மக்கள் ஏற்றுக்கொண்டனர். அது ரஜினிகாலம். கறுப்பாக இருந்தாலும் கம்பீரமாக மிடுக்குடன் இருந்தால் ஜெயிக்கலாம் என கேப்டன் விஜயகாந்தைக் கொண்டாடினார்கள். பெண் சாயல் குரல் கொண்ட ஹீரோவை, மூக்குக்கண்ணாடியுடன் வலம் வந்த பாக்யராஜை, நம்மில் ஒருவராகப் பார்த்தார்கள் ரசிகர்கள். ‘இந்தப் பையன் நாலுவீடு தள்ளி இருக்கிற பையன் மாதிரி இருக்கானே, நல்லா நடிக்கிறானே’ என்று தனுஷை ஆரத்தழுவி வரவேற்றார்கள்.
காமெடிப்பேச்சில் அறிமுகமான சிவகார்த்திகேயனையும் யதார்த்தப் பேச்சிலும் நம்மை சரணடைய வைத்த விஜய் சேதுபதியையும் மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால்தான் ஆச்சரியம்! இன்றைக்கு பிரதீப் ரங்கநாதனுக்குள்ளும் அபிஷன் ஜீவந்துக்குள்ளும் தாங்களே இருப்பதாகக் கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்! ஆனால் சூரி இந்த வரிசைகளுக்கு அப்பாற்பட்டவராகவும் இருக்கிறார். இந்த ரக குணங்களிலிருந்தும் புறப்பட்டு வந்திருக்கிறார். அதற்கு முன்னதாக தமிழ் சினிமாவையும் காமெடி நடிகர்கள் நாயகர்களாக வளர்ந்ததையும் பார்த்தால், அதிலும் சூரி தனித்துவம் மிக்கவர்தான். அதற்குக் காரணங்கள் இருக்கின்றன.
கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன், நாயகனாக நடித்தார். அதேசமயம் காமெடிக்குள் சமூக நீதிகளையும் போதனைகளையும் பகடி செய்து உணரவைத்தார். டணால் தங்கவேலுவும் அப்படித்தான். எந்தக் கேரக்டராக இருந்தாலும் அதில் காமெடியே கொடிகட்டிப் பறக்கும். எம்ஜிஆருக்கு வில்லனாக தங்கவேலு நடித்தபோதும் கூட வில்லத்தனத்தையும் மீறி, காமெடியும் களைகட்டும்.
இதையடுத்து வந்த சந்திரபாபுவும் நாகேஷும் இந்த வகைதான். ஆனால் ‘கவலை இல்லாத மனிதன்’ என்று சந்திரபாபு கலங்கடித்தார். ‘நீர்க்குமிழி’ வாழ்க்கையைச் சொல்லி கண்கசியவைத்தார் நாகேஷ். ஆனாலும் அவர்களுடைய படங்களில் குறும்பும் குசும்பும் இருக்கவே செய்தன. பிறகு வந்த தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், ஒய்ஜி மகேந்திரன், கவுண்டமணி கூட காமெடியும் கலந்த ஹீரோ நடிகர்களாக வலம் வந்தார்கள். வடிவேலுவும் விவேக்கும் சந்தானமும் கூட இப்படித்தான். ‘மாமன்னன்’ விதிவிலக்கு வடிவேலுவுக்கு!
ஆக, காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிக்கும்போது காமெடியோ அதற்கு ஏற்றதான பழைய உடல்மொழிகளோ இல்லாமல் நடிப்பது உலக அதிசயம். ‘ரசிகர்கள் ஏத்துக்கமாட்டாங்க’ என்று பழியை மக்கள்பக்கம் போடுகிற சினிமா உலகம் இது. சின்னச் சின்ன வேடங்களில் வந்து, பிறகு சுசீந்திரனின் ‘வெண்ணிலா கபடிக்குழு’வில் பரோட்டா சாப்பிட்டு, நாமும் பரோட்டா சாப்பிடலாமே என தூண்டிய சூரி, அடுத்தடுத்து காமெடியில் கவனம் ஈர்த்தார்.
மதுரை ஸ்லாங்குடன் கூடிய அப்பாவித்தன முகபாவனைகளால் கவனம் ஈர்த்தவருக்கு ‘சுந்தரபாண்டியன்’ பத்துப்பதினைந்து படிகள் முன்னேறிப்போக வைத்தது. ஹீரோவின் கால்ஷீட் எத்தனை நாட்களோ சூரியின் கால்ஷீட்டும் அத்தனை நாட்கள், என சிவகார்த்திகேயன், விஷால், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி என அவர்களைப் போலவே பிஸி நடிகரானார் சூரி.
இந்தக் காலகட்டத்தில்தான், கதையை ஒரு சிற்பியைப் போல் செதுக்கும் வெற்றிமாறன் ‘விடுதலை’ எடுத்தார். சூரியை நாயகனாக்கினார். கான்ஸடபிள் குமரேசனாகவே மாறினார். அந்த உடலில் அதுவரை இருந்த சூரி இல்லை.
வசன உச்சரிப்பில் பழைய சூரியைக் காணோம். பேந்தப்பேந்த முழித்த சூரி ஒரு இடத்தில் கூட எட்டிப்பார்க்கவில்லை. டைமிங்கில் காமெடி செய்யும் அந்த எகத்தாளமும் பகடியும் செய்கிற சூரியை, ஒரு சட்டையைக் கழற்றிவிட்டு வருவது போல், ‘விடுதலை’க்கு விடுதலை உணர்வுடன் தன்னை ஒப்புக்கொடுத்தார். அதுவரை எந்த காமெடி நடிகரும் செய்யத்துணியாத காரியம்.
2009ம் ஆண்டு தொடங்கிய ‘வெண்ணிலா கபடிக்குழு’வின் சூரிப்பயணம் 2023 வரை பயணித்து, பட்டையைக் கிளப்பியதே பெருஞ்சாதனைதான்.
14 வருட வனவாசம் போல், காமெடிநறுமணத்தால் கமகம வீசிய சூரியின் நறுமண வாழ்வில், 2023ம் ஆண்டு, இன்னொரு வனவாசமாக, காட்டுக்குள் எடுக்கப்பட்ட மலையும் மரங்களும் அடர்ந்த அந்தப் பகுதிக்குள் இருந்து, சூரியின் ஒருகையை வெற்றிமாறன் பிடித்துக்கொள்ள, இன்னொரு கையை இளையராஜா பிடித்துக்கொள்ள மலையேறினார் சூரி. ‘முழுசா மாறிய சந்திரமுகியைப் பாரு’ என்பது போல், பரோட்டா சூரி, குமரேசனாக மாறினார். கூடுகூடுவிட்டு பாய்ந்தவர், புதிய சூரியாக வெளிப்பட்டார்.
2024ம் ஆண்டு, இந்த முறை சிவகார்த்திகேயன் சூரியை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். பின்னணி இசையே இல்லாமல் வெளியான ‘கொட்டுக்காளி’க்குள் சுண்ணாம்பு தடவிய தொண்டையுடன், கரகர குரலில், கைலியை தூக்கிக்கட்டுக்கொண்டு ஆணாதிக்கத்தின் குறியீடாகவே சேவலாட்டம் போட்டார் சூரி. அதே ஆண்டில், ஹாட்ரிக் அடித்தார். முன்னதாக, மே மாதம் 31ம் தேதி, சசிகுமார், உன்னி முகுந்தன் நடித்தாலும் ‘கருடன்’ படத்தில் ‘கருடன்’ சூரிதான்.
உயரப்பறந்தார். 2024ம் ஆண்டின் முதல் வெற்றி. அடுத்துதான் ஆகஸ்ட் 23ம் தேதி ‘கொட்டுக்காளி’. மீண்டும் வெற்றிமாறன் சூரி எனும் தங்கத்தை புடம்போட்டார். ‘விடுதலை 2’வில் குமரேசன் புரட்சிக்காரனாக மறைந்துபோக, செவ்வணக்கம் சொல்லி, அவரின் பாய்ச்சலை கொண்டாடித் தீர்த்தார்கள். பெருமாள் வாத்தியார் போல், குமரேசனும் ‘விடுதலை 3’ல் உருவாவது வெற்றிமாறனின் கையிலும் சூரியின் கையிலும்தான் இருக்கிறது.
இதன் பிறகு வந்த ‘மாமன்’ படத்தை மொத்தமாக தன் தோளில் தூக்கிச் சுமந்து தாங்கினார். 2025ல் வெளியான இந்தப் படத்தை அடுத்து, காட்டுக்கு வந்தவர் ‘ஏழு கடல் ஏழு மலை’ என தன் பிரமாண்டத்தை விஸ்தரித்துக் கொண்டே இருக்கிறார் சூரி. ஹீரோவாக சூரியின் ஆறாவது படமாக ’மண்டாடி’ இப்போது! கடலாடியாக, மண்டாடியாக உக்கிரதாண்டவத்துடன் ஆட்டமும் போட்டு அடுத்தக்கட்டத்துக்கு தன்னுள்ளிருக்கிற சூரி என்கிற நடிப்பு ராட்சஷனை, மிக அழகாகவும் நிதானமாகவும் கையாள்கிற சூரிக்கு, ஆறாவது வெற்றியை இந்தக் கடல் கதை, ‘மண்டாடி’ கொடுக்கும்! சூரி இப்போது காமெடி நடிகரில்லை.
யதார்த்த நடிகர். இயல்பான நடிப்பால் ஈர்ப்பவர். சினிமா ஹீரோக்களுக்கு இருக்கிற பில்டப்புகள் இல்லாமலேயே கோட்டை கட்டியிருக்கிறார். மார்க்கெட் வேல்யூ கொண்ட நடிகராகவும் வேல்யூ கொண்ட ஹீரோவாகவும் இருப்பதால், சூரி இன்னும் இன்னுமாகக் களமாடுவார். நின்று ஆடுவார். இன்னும் பத்து வருடங்களுக்கு சூரியின் பட்டொளி வீசி பறக்கும். அது சினிமாவை புதுசாக்க வருகிறவர்களுக்கான முகவரியாகவும் இருக்கும்!
- வி.ராம்ஜி