சினிமா

அடுத்த ஆட்டத்தைத் தொடங்கும் விஜய் சேதுபதி? அமைதியாகத் தயார் செய்யப்படும் அரசியல் அஸ்திவாரம்!

By Christon
24 Sep 2026, 06:20 PM
நடிகர் விஜய் சேதுபதி தன் ரசிகர் மன்றத்திற்கு புதிய தலைமை ஒருங்கிணைப்பாளரை நியமித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் விஜய் சேதுபதி, தனது ரசிகர் மன்றத்திற்குப் புதிய தலைமை ஒருங்கிணைப்பாளரை நியமித்து வெளியிட்டுள்ள அறிவிப்பு சினிமா வட்டாரங்களைத் தாண்டி அரசியல் களத்திலும் கவனம் பெற்றுள்ளது.

அகில இந்திய விஜய் சேதுபதி நற்பணி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பி. பிரசாத் என்பவரை நியமிப்பதாக விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ லெட்டர் பேடில் அறிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது, மாவட்ட மற்றும் மண்டல அளவிலான அமைப்புகளை வலுப்படுத்துவது, புதிய நிர்வாகிகளை உருவாக்கி உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்துவது என மிகத் தெளிவான அறிவுறுத்தல்களை அவர் வழங்கியுள்ளார். அடிமட்டம் வரை ரசிகர் மன்றக் கட்டமைப்பை வலுப்படுத்தும் இந்த நடவடிக்கை, ரஜினிகாந்த், விஜய் போன்ற நடிகர்கள் தங்களின் அரசியல் வருகைக்கு முன் மேற்கொண்ட நகர்வுகளை நினைவூட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே முதலமைச்சர் விஜய் மறைமுகமாக விமர்சித்ததாக சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி, தற்போது தனது ரசிகர் மன்ற கட்டமைப்பில் கவனம் செலுத்துவது கவனம் பெற்றுள்ளது.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரிடம் பேசியபோது, "வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, பிரச்சனை வரும்போது ஒழிந்து கொள்வதும், பின்னர் எதிர்க்கட்சியைப் பழிபோடுவதும் நல்ல தலைவனுக்கு அழகல்ல" என்று குறிப்பிட்டார். இந்தப் பேச்சு முதலமைச்சர் விஜய்யை மறைமுகமாகத் தாக்குவது போல் இருப்பதாகக் கூறி தவெகவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

தன் மீதான விமர்சனங்கள் அதிகரித்த நிலையில் 'பத்தா' திரைப்பட நிகழ்விலும், பிக் பாஸ் மேடையிலும் விஜய் சேதுபதி உடனடி விளக்கம் அளித்தார். "நான் பேசியது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களின் செயல்பாட்டை மட்டுமே குறிக்கும்; வெளியில் இருக்கும் எந்தவொரு தனிநபரையோ அல்லது அரசியல் அமைப்பையோ குறித்தது அல்ல" என தெளிவுபடுத்தினார்.

இந்த நிலையில், விஜய் சேதுபதியின் இந்த விளக்கம் ஒருபுறம் இருக்க, நற்பணி இயக்கத்தை மாநில அளவில் தீவிரமாகப் பலப்படுத்தி வரும் அவரது வேகம் வெறும் சினிமா சார்ந்த நற்பணிகளுக்குத்தானா அல்லது எதிர்கால அரசியல் திருப்பத்திற்கான அஸ்திவாரமா என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது.