சினிமா

"த்ரிஷா இப்படி பண்ணுவாங்கனு நினைக்கல.." நடிகை மாளவிகா மோகனன் Open Talk!

By Christon
09 Sep 2026, 08:46 AM
நடிகை த்ரிஷா குறித்து மாளவிகா மோகனன் பகிர்ந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரு வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'சர்தார் 2' திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், படத்தின் விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில், நடிகை த்ரிஷா குறித்துப் பகிர்ந்த கருத்துக்கள் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளன.

'பேட்ட' படப்பிடிப்பு நினைவுகள்

தான் தமிழில் அறிமுகமான 'பேட்ட' பட அனுபவத்தைக் குறிப்பிட்ட மாளவிகா, "பேட்ட தான் நான் நடித்த முதல் தமிழ் திரைப்படம். அதற்கு முன்பாக சில படங்களில் நடித்திருந்தாலும், மிகப்பெரிய படங்களில் நடித்த அனுபவம் எனக்கு இல்லை. அதனால் அந்த சமயத்தில் நான் ஒரு புதுமுகமாகவே இருந்தேன். வாரணாசிக்கு அருகில் நடைபெற்ற படப்பிடிப்பில் நானும் த்ரிஷாவும் இணைந்து நடிக்கும் காட்சிகள் இருந்தன," என்று கூறினார்.

கனிவான அணுகுமுறை

படப்பிடிப்பின் போது த்ரிஷா தன்னிடம் பழகிய விதம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய அவர், "நான் புதியவர் என்ற எந்த உணர்வும் எனக்கு வராதபடி த்ரிஷா என்னை மிகவும் சௌகரியமாக உணர வைத்தார். இருவரும் ஒரே ஹோட்டலில் தான் தங்கியிருந்தோம். அவர் வெளியே எங்குச் செல்வதாக இருந்தாலும் என்னையும் மறக்காமல் அழைத்துச் செல்வார்; என்னை ஒருபோதும் தனியாக விட்டதில்லை. தான் செய்யும் ஒவ்வொன்றையும் முழு மனதுடன் செய்யக்கூடியவர். திரையுலகில் பலர் அமைதியாக ஒதுங்கிவிடும் சூழலில், த்ரிஷா எல்லாரிடமும் அன்பாகப் பழகுவது மிகவும் அரிதான ஒரு குணம்," எனப் பாராட்டினார்.

த்ரிஷாவின் வாழ்த்து

'பேட்ட' படப்பிடிப்பு முடிந்து சில மாதங்களுக்குப் பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு மாளவிகாவிற்கு கிடைத்தது. அந்தச் செய்தியை அறிந்தவுடன் த்ரிஷா தனக்கு குறுஞ்செய்தி அனுப்பி வாழ்த்தியதாகக் கூறிய மாளவிகா, "'ஹே பேப், உனக்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன். இது ஒரு பெரிய வாய்ப்பு, வாழ்த்துகள்' என அவர் அனுப்பிய மெசேஜ் என்னை நெகிழ வைத்தது. பிறரின் வளர்ச்சியைக் கண்டு வாழ்த்துவதற்கு ஒரு பெரிய மனம் வேண்டும்," என்று குறிப்பிட்டார்.

த்ரிஷாவின் இந்த குணத்தைப் பற்றி மாளவிகா மோகனன் பகிர்ந்துகொண்ட தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.