இயக்குநர் ஆர்.அஜய் ஞானமுத்துவும், 'ஒயிட்நைட்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் ஏ. விஜயா சுப்பிரமணியனும் கடந்த 2023-ஆம் ஆண்டு இணைந்து திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகத்திற்கான ஒப்பந்தம் ஒன்ற மேற்கொண்டனர். அதன்படி, 'டிமாண்டி காலனி-2' மற்றும் அதன் தொடர்ச்சியான 'டிமாண்டி காலனி-3', 'டிமாண்டி காலனி-4' ஆகிய அனைத்துப் படங்களையும் இரு தரப்பினரும் பங்குதாரர்களாக உள்ள நிறுவனம் மூலமே தயாரித்து வெளியிட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஒப்பந்த விதிகளை மீறித் தனக்குத் தெரியாமல் 'பேஷன் பிலிம் பேக்டரி' நிறுவனம் மூலம் 'டிமாண்டி காலனி 3' படத்தை தயாரித்து, தணிக்கைச் சான்று பெற்று ஓடிடி (OTT) தளத்திற்கு விற்பனை செய்துள்ளதாக ஏ. விஜயா சுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஒப்பந்தப்படி, உரிமைகள் தொடர்பான சிக்கல்களுக்குச் சமரச தீர்வு மையத்தை அணுகும் வரை திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு, 'டிமாண்டி காலனி 3' படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனு தொடர்பாக இயக்குநர் அஜய் ஞானமுத்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்.