தமிழ் சினிமாவில் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகும்போது, திரையரங்குகள் ஒதுக்கீடு முதல் வசூல் வரையிலான போட்டி அதிகரிப்பது வழக்கம். அந்த வகையில், நடிகர் தனுஷின் பிரம்மாண்ட ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘ஓம் - Chapter 1: Udhiram’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தற்போது புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தனுஷின் 55-வது படமாக உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தை, ‘அமரன்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். வரலாறு, ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் அம்சங்கள் கலந்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் ‘ஓம்’ :
‘ஓம்’ திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து ஸ்ரீலீலா, சாய் பல்லவி, மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, நஸ்ருதீன் ஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் கதை, மேக்கிங் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் குறித்து படக்குழு தொடர்ந்து எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.
இப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
‘ஜெயிலர் 2’ ரிலீஸ்... உருவான புதிய சிக்கல் :
இந்நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஒரு நாள் இடைவெளியில் இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் திரைக்கு வரவிருந்தன.
ரஜினிகாந்த் - தனுஷ் என இருவரின் படங்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், ஒரே காலகட்டத்தில் வெளியானால் திரையரங்கு எண்ணிக்கை, காட்சிகள் ஒதுக்கீடு மற்றும் வசூல் ஆகியவற்றில் போட்டி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
போட்டியை தவிர்க்கும் முடிவா?
இதையடுத்து, ‘ஓம்’ படத்தின் வெளியீட்டு தேதியை மாற்ற படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ‘ஜெயிலர் 2’ படத்துடன் நேரடி மோதலை தவிர்க்கும் வகையில், தனுஷின் படம் வேறு தேதியில் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தனுஷ் நடிக்கும் படங்கள் பல முறை பெரிய படங்களுடன் போட்டியிட்டு வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் ‘பொன்னியின் செல்வன்’ படத்துடன் ‘நானே வருவேன்’ திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இந்த முறையும் ‘ஜெயிலர் 2’ உடன் ‘ஓம்’ மோதும் சூழல் உருவானது ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் வெளியாகுமா?
வர்த்தக வட்டார தகவல்களின் படி, ‘ஓம்’ திரைப்படம் நவம்பர் 27 அல்லது டிசம்பர் 2-ம் தேதி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
முன்னாள் மாமனார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்துடன் தனது படத்தை களமிறக்க இருந்த தனுஷ், தற்போது பாக்ஸ் ஆபீஸ் கணக்குகளை கருத்தில் கொண்டு அந்த போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுக்கிறாரா என்ற கேள்வி கோலிவுட்டில் எழுந்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை ‘ஓம்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த எதிர்பார்ப்பு தொடர்ந்து நீடிக்கிறது.