சினிமா

விஜயின் வருகை குறித்து அஜித் சொன்னது என்ன... வைரலாகும் வீடியோ !

By Sumalekha
11 Sep 2026, 09:47 PM
முதலமைச்சர் விஜயின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்த அஜித் குமார், இந்தியாவில் சர்வதேச தர கார் பந்தயங்கள் நடைபெற வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் செப்டம்பர் 10 முதல் 16ஆம் தேதி வரை பிரிட்டன் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், அதே காலகட்டத்தில் சில்வர்ஸ்டோனில் அஜித் பங்கேற்கும் கார் பந்தயமும் நடைபெற உள்ளதால், விஜய் - அஜித் சந்திப்பு நிகழுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.

Michelin Le Mans Cup வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம், விஜய் சில்வர்ஸ்டோன் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது உறுதியான நிலையில் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி கூறும் விதமாக அஜித்குமார் பேட்டியளித்துள்ளார். 

அதாவது, கார் பந்தய வீரரும், நடிகருமான அஜித் குமார், முதலமைச்சர் விஜய் தன்னை நேரில் வந்து சந்தித்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சினிமா துறையில் கடந்த 34 ஆண்டுகளாக இருவரும் சக ஊழியர்களாக பயணித்து வருவதாக குறிப்பிட்டுள்ள அஜித் குமார், இந்த சந்திப்பு தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அஜித் குமார் கூறியதாவது:

"34 ஆண்டுகளாக திரைத்துறையில் சக பயணிகள்" :

"முதலமைச்சர் விஜய் தனது பரபரப்பான பணிகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி எங்களை சந்திக்க வந்தார். கடந்த 34 ஆண்டுகளாக நாங்கள் இருவரும் திரைத்துறையில் சக பயணிகளாக இருந்து வருகிறோம்.விஜய் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஒரு நடிகராக மட்டுமல்லாமல், தற்போது விளையாட்டுத் துறையிலும் அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக மோட்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் அவர் மற்றும் அவரது குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்." என்று அஜித்குமார் கூறியுள்ளார். 

கார் ரேஸ் நடத்துவதன் சவால்கள் குறித்து :

"இவ்வளவு பெரிய அளவிலான கார் பந்தய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பின்னால் இருக்கும் சவால்கள், ஏற்பாடுகள் குறித்து தெரிந்து கொள்வதற்காகவே அவர் இங்கு வந்து பார்வையிட்டார். இதுபோன்ற நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தை அவர் புரிந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வளர்ச்சிக்கு கிடைக்கும் ஆதரவு மிகவும் முக்கியமானது." என்றும் அஜித்குமார் அறிவுறுத்தியுள்ளார். 

"இந்தியாவில் கார் பந்தயங்கள் நடைபெற வேண்டும்" :

"என்னுடைய விருப்பம் என்னவென்றால், இதுபோன்ற சர்வதேச தரத்திலான கார் பந்தய நிகழ்ச்சிகள் இந்தியாவிலும் நடைபெற வேண்டும். இந்திய மண்ணில் நாமும் பந்தயங்களில் பங்கேற்று போட்டியிட வேண்டும் என்பதே எனது கனவு.

இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் மேலும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதே எனது ஆசை."

இவ்வாறு நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

சில்வர்ஸ்டோன் பந்தயத்தில் விஜய் கலந்து கொண்டு அஜித் குமார் ரேசிங் அணியை உற்சாகப்படுத்த உள்ள நிலையில், அஜித்குமார் அளித்துள்ள பேட்டியின் வீடியோ ரசிகர்களின் மத்தியிலும், சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.