ஆன்மிகம்

மக்களை ஏமாற்றுகிறீர்களா? மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் பரபரப்பு!

By Christon
17 Sep 2026, 05:18 PM
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் புனித நீர் தெளிக்காமல், சாதாரண குடிநீரைத் தெளித்து ஏமாற்றியதாகக் கூறி பக்தர்கள் ஆவேசம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (செப்.17) மகா குடமுழுக்கு விழா மிக விமரிசையாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த லட்சக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு முதலே கோயில் வீதிகளில் திரண்டு காத்திருந்தனர்.

இன்று காலை கோபுர கலசங்களுக்கும் தங்க விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா குடமுழுக்கு நடத்தப்பட்டது. கோபுரத்தின் மீது ஊற்றப்படும் புனித நீர்த்துளிகள் தங்கள் மீதும் பட வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன், பல மணி நேரம் வெயிலையும் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் காத்திருந்தனர். ஆனால், பாதுகாப்புத் தடுப்புகள் காரணமாகச் சாதாரண மக்கள் நின்றிருந்த பல பகுதிகளுக்குக் கோபுரக் கலசங்களிலிருந்து தெளிக்கப்பட்ட நீர் வந்து சேரவில்லை எனவும், சிறப்புப் பிரமுகர்கள் நின்றிருந்த பகுதிகளில் மட்டுமே புனித நீர் தெளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வெளியே நின்ற மக்கள் புனித நீர் கிடைக்காமல் ஏமாற்றமடைந்து, தங்களை உள்ளே அனுமதிக்குமாறு கோஷமிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற காவல்துறையினர், அங்கிருந்த குடிநீர் தொட்டியில் இருந்து சாதாரண நீரைக் கொண்டு வந்து "இதுதான் கலசத்தில் இருந்து எடுக்கப்பட்ட புனித நீர்" எனக் கூறி பக்தர்கள் மீது தெளித்ததாகக் கூறப்படுகிறது. குடமுழுக்கு புனித நீருக்கான நறுமணம் ஏதுமின்றி, பாத்திரங்களில் கொண்டு வரப்பட்ட சாதாரண நீரைக் கண்டதும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தங்களுக்குச் சாதாரண தண்ணீரைக் கொண்டு வந்து புனித நீர் என்று ஏமாற்றித் தெளித்ததைக் கண்ட பக்தர்கள், காவல்துறையினரையும் கோயில் நிர்வாகத்தையும் முற்றுகையிட்டுக் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். "17 ஆண்டுகள் கழித்து மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகத்தைப் பார்க்க வந்த இடத்தில், ஒரு சொட்டு புனித நீர் கூடக் கிடைக்காமல் சாதாரண தண்ணீரைக் கொண்டு வந்து தெளித்து ஏமாற்றுகிறீர்களா?" எனக் பக்தர்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர். பக்தர்களின் கோபம் எல்லை மீறியதால் காவல்துறை அதன்பின் தண்ணீர் தெளிப்பதைக் கைவிட்டது.

ஆன்மிக மரபுகளைப் பின்பற்றாமல், சாதாரண தண்ணீரைக் கொண்டு வந்து புனித நீர் எனத் தெளித்து ஏமாற்றியது பக்தர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாகவும், இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.